பாத்திர தொழிலாளர்கள் கூலி உயர்வு தொடர்பாக தொழிலாளர் நலத்துறை ஆணையரை சந்தித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது என்று அனைத்து தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோரிக்கை கடிதம்
திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் 300-க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த மாதம் 31-ந்தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து எவர்சில்வர் பாத்திர வகைகளுக்கு 50 சதவீதமும், பித்தளை, தாமிரம், வார்ப்பு வகைகளுக்கு 60 சதவீதமும், ஈயப்பூச்சுக்கு 70 சதவீதமும் கூலி உயர்வு கேட்பது என அனைத்து தொழிற்சங்க கூட்டுக் கமிட்டிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டது.
கூட்டுக் கமிட்டி கூட்டம்
ஆனால், மூலப்பொருட்கள் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, வியாபார மந்தம், கொரோனா உள்பட பல்வேறு பிரச்சினைகளால் பாத்திர தொழில் நசிவடைந்துள்ளதால், தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கூலியையே அடுத்த ஓராண்டிற்கு வழங்குவது என்றும், தொழிலாளர்களுக்கான புதிய கூலி உயர்வுக்கு 1 ஆண்டு அவகாசம் வழங்க வேண்டும் என்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த முடிவை நிராகரித்த தொழிற்சங்கத்தினர், ஒரு வார காலத்திற்குள் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்று கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தின் மூலமாக அறிவித்திருந்தனர். ஆனால், உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், அடுத்த கட்ட முடிவு எடுப்பதற்கான பாத்திரத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டி கூட்டம் அனுப்பர்பாளையத்தில் உள்ள சி.ஐ.டி.யு. பாத்திரத்தொழிலாளர் சங்க அலுவலகத்தில் வேலுச்சாமி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
விளக்க கூட்டம்
இந்த கூட்டத்தில் குப்புசாமி, குபேந்திரன் (சி.ஐ.டி.யு), நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி), அர்சுனன் (காமாட்சியம்மன் சங்கம்), அசோக் (ஐ.என்.டி.யு.சி), ரத்தினசாமி (எல்.பி.எப்), பாண்டியராஜ் (எச்.எம்.எஸ்), சீனிவாசன், லட்சுமிநாராயணன் (பி.எம்.எஸ்), தேவராஜ் (ஏ.டி.பி), உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருப்பூர் வட்டார எவர்சி்ல்வர் முழுக்கூலி பட்டறைதாரர்களுக்கும், திருப்பூர் பாத்திர வியாபாரிகள் சங்கத்திற்கும், அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில், கடந்த 31-ந்தேதி கொடுத்த கடிதத்திற்கு இன்னும் பதில் வராத காரணத்தால், தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கையை சுமூகமாக முடிக்க திருப்பூர் தொழிலாளர் துணை ஆணையரை விரைவில் சந்திப்பது என்றும், அதன் பின்னர் அனைத்து பாத்திர தொழிற்சங்கங்களின் கூட்டத்தை கூட்டி, தொழிலாளர்களுக்கு விளக்க கூட்டம் நடத்துவது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.