திருப்பூரில் கடை வீதிகளில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்

Update: 2022-10-09 17:13 GMT


தீபாவளிக்கு பண்டிகைக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் திருப்பூர் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குடும்பம்,குடும்பமாக வந்து புத்தாடைகளை வாங்கிச்சென்றனர்.

தீபாவளி பண்டிகை

தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தீபாவளிக்காக புத்தாடை மற்றும் பண்டிகை கொண்டாட்டத்திற்கான பொருட்களை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தீபாவளிக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் திருப்பூரில் உள்ள முக்கிய கடை வீதிகளில் நேற்று பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக ஜவுளிக் கடைகளில் மக்கள் குடும்பமாக வந்து அனைவருக்கும் புத்தாடைகளை வாங்கி சென்றனர்.

குடும்பத்துடன் குவிந்தனர்

இதனால் திருப்பூர் குமரன் சாலை, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். குறிப்பாக புது மார்க்கெட் வீதியில் ஜவுளிக்கடை, நகைக்கடை, பேன்சி, ஓட்டல்கள் உள்பட ஏராளமான கடைகள் இருப்பதால் அந்த பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

திருப்பூரில் தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதிகளுக்கு பொதுமக்கள் நேற்று குடும்பத்துடன் அதிக அளவில் வந்ததால் மாநகரின் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்