கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் குட்கா பறிமுதல்

கர்நாடகாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-05 20:26 GMT

கர்நாடகாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குட்கா கடத்தல்

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.

தஞ்சை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையில் தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு குட்கா கடத்தி வரப்படுவதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

2 ஆயிரத்து 78 கிலோ குட்கா

அதன்பேரில் தனிப்படை போலீசார் வேளாங்கண்ணியை அடுத்த பாலக்குறிச்சி என்ற இடத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கன்டெய்னர் லாரியை மறித்து சோதனை செய்தனர்.

சோதனையின்போது அந்த லாரியில் 2 ஆயிரத்து 78 கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது. இந்த குட்காவை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரிய வந்தது.

ரூ.50 லட்சம் மதிப்பு

இது தொடர்பாக கஞ்சாவை கடத்தி வந்த வேளாங்கண்ணி அருகே உள்ள பாலக்குறிச்சி மேலத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கவாஸ்கர், கன்டெய்னர் லாரியின் டிரைவர் கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த புத்தேகவுடா மகன் பிரதீப் ஆகிய 2 பேரையும் மடக்கிப்பிடித்தனர். இதையடுத்து 2 ஆயிரத்து 78 கிலோ குட்காவையும், கன்டெய்னர் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். குட்காவின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.

இதையடுத்து குட்கா மற்றும் கன்டெய்னர் லாரியை வேளாங்கண்ணி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குட்காவை கடத்தி வந்தவர்களை கைது செய்த தனிப்படையினரை, தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்