பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு குருமன்ஸ் இன மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

தண்டராம்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று குருமன்ஸ் இனமக்கள் சாதிச்சான்றிதழ் வழங்காத அலுவலர்களை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-17 13:34 GMT

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று குருமன்ஸ் இனமக்கள் சாதிச்சான்றிதழ் வழங்காத அலுவலர்களை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குருமன்ஸ் இன மக்கள்

தண்டராம்பட்டு தாலுகாவில் குறிப்பாக தானிப்பாடி பகுதியை ஒட்டியுள்ள மலை கிராமங்களில் குரும்பர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பழங்ழுகுடியினர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.ஆனால் தற்போது சில ஆண்டுகளாக இந்த சாதி சானறிதழ் வழங்காமல் அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இதனால் இந்த இனத்தை சேர்ந்த மக்கள் பள்ளியில் சேரவும் வேலை வாய்ப்பு பெறவும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். பலமுறை சாதி சான்றிதழ் கேட்டு போராட்டங்களும் நடத்தப்பட்டது.கோட்டாட்சியர் தலைமையிலும் சம்பந்தப்பட்ட கிராமங்களில் நேரடி விசாரணை நடத்தப்பட்டது ஆனாலும் சாதி சான்றிதழ் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

உண்ணாவிரத போராட்டம்

எனவே தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ள வருவாய் அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கை கண்டித்து குருமன்ஸ் இன மக்கள் நேற்று தண்டராம்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் பரிமளா, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, மண்டல துணை தாசில்தார் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் விஏஓ ஜெயந்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் வீடுகளில் நேரடி விசாரணை நடத்தப்பட்டு கோட்டாட்சியருக்கு கோப்புகள் அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.திருவண்ணாமலை கோட்டாட்சியர் இறுதி முடிவு எடுத்து சான்றிதழ் வழங்குவார். எனவே 2 நாட்கள் அதற்கான கால அவகாசம் வழங்கும்படி கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.

பழங்குடியினருக்கான ஆதாரம்

போராட்டக்காரர்கள் தரப்பில் கூறும்போது, ''பல ஆண்டுகளாக நாங்கள் எங்கள் சமூகத்தினருக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

பேச்சுவார்த்தை நடத்தும் அரசு அதிகாரிகள் போராட்டத்தை கைவிடுங்கள் விரைவில் சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை வழங்கவில்லை. ஆடு, மாடு மேய்ப்பது எங்கள் தொழில். நாங்கள் அய்யரை வைத்து திருமணம் செய்வது கிடையாது. தலையில் தேங்காய் உடைத்து குலதெய்வ வழிபாடு செய்கிறோம். எங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை ஆதாரமாக நாங்கள் வைத்துள்ளோம். அதன் அடிப்படையில் எங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கவேண்டும்'' என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்