மடத்துக்குளம் தாலுகா பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள், சில சிறு நகரங்கள் உள்ளன. இங்கு மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மக்களால் குப்பைகள் கழிவுகள் அதிக அளவில் உருவாக்கப்படுகின்றன. சுழற்சி முறையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்க திட்டங்கள் உள்ளன. இருந்தாலும் இவை முழுமையாக செயல்படுவது கிடையாது. தாலுகாவின் பல இடங்களில் குப்பைகள் அப்புறப்படுத்தப்படாமல், குவிந்து கிடக்கிறது. சில ஊராட்சி பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு போதிய இட வசதி இல்லை. இதனால் தெருக்கள், சாலை ஓரங்கள், முக்கிய பகுதிகளில் குவித்து வைக்கப்படுகிறது. ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சவாலாக இந்த குப்பைகள் உள்ளன.
இதனால் சில இடங்களில் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுகிறது. செங்கண்டிபுதூரிலிருந்து துங்காவி செல்லும் ரோடு, கிருஷ்ணாபுரம் வாய்க்கால் பகுதி அமராவதி ஆற்று பாலம் பகுதி, மற்றும் பல ஊராட்சிகளில் இதுபோல குப்பைகளுக்கு தீ வைக்கப்படுகின்றன. மரங்கள், தாவரங்கள், மற்றும் விளைநிலங்கள் அருகில் தீவைக்கப்படுவதால் குப்பைகள் எரியும்போது பல ஆண்டுகள் வளர்ந்து பலன் தரும், நிழல்தரும் நிலையில் உள்ள நல்ல மரங்களின் வேர்கள் தீயில் எரிந்து அதன் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வீணாகிறது.