பொட்டையம்பாளையத்தில் சாலையோரத்தில் குப்பைகழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
குப்பை கழிவுகள்
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது தொட்டம்பட்டி ஊராட்சி. தொட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டையம்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பொட்டையம்பாளையத்தில் இருந்து தொட்டம்பட்டி செல்லும் வழியில் குடியிருப்புகளை ஒட்டியுள்ள பகுதியில் சாலையோரத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
குப்பைகளோடு பிளாஸ்டிக் கவர்களும் அதிக அளவில் காணப்படுகிறது. பிளாஸ்டிக் கவர்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
சுகாதார சீர்கேடு
மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யும் முறை ஊராட்சிகளில் செயல்பாட்டில் இல்லை. இதனால் கிராம மக்கள் குப்பைகளை சாலையோரங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் கொட்டி செல்கின்றனர்.
குப்பைகளை கொட்டுவதற்காக ஊராட்சிக்கு வழங்கப்பட்ட குப்பைத்தொட்டிகள் பயன்படுத்தப்படாமல் குப்பையில் கிடைக்கும் அவலம் உள்ளது.
குப்பைத்தொட்டியில் கொட்டப்பட வேண்டிய குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுகிறது. எனவே குப்பைகளை குடியிருப்பு பகுதிகளிலோ சாலையோரங்களிலோ கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.