ஜோத்தம்பட்டி ஊராட்சியில் குப்பை கிடங்காகும் சாலைகள்

Update: 2023-01-03 16:24 GMT


மடத்துக்குளம் ஒன்றியம் ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியில் சாலையோரங்களில் குப்பைகள் குவித்து வைக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திடக்கழிவு மேலாண்மை

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

ஊராட்சிப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டப்படுகிறது. தினசரி வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் தூய்மைப்பணியாளர்களால் சரிவர வாங்கப்படாததால் பல இடங்களில் பொதுமக்கள் குப்பைகளை வீசிச் செல்கின்றனர்.

மேலும் ஊராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை சாலை ஓரங்களில் குவித்து வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. மேலும் சாலை ஓரங்களில் உள்ள மழைநீர் வடிகால்கள் குப்பைகளால் அடைபடுவதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அத்துடன் குப்பை கழிவுகள் மழைநீருடன் கலந்து துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்றுகள் பரவவும் காரணமாகிறது.

விபத்துக்கள்

குப்பையில் கிடக்கும் உணவுக்கழிவுகளை உண்பதற்கு நாய்கள் மற்றும் கால்நடைகள் அங்கு முகாமிடுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அவ்வப்போது விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

அத்துடன் குப்பையில் அதிக அளவில் பாலிதீன் கழிவுகள் வீசப்படுவதால் அவற்றை உண்ணும் கால்நடைகள் வயிறு சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுவதுடன் சில வேளைகளில் உயிரிழக்கவும் நேரிடுகிறது. மேலும் சில நேரங்களில் குப்பைகளில் மர்ம ஆசாமிகள் தீ வைத்துச் செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறி விடுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

அத்துடன் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகள் சுவாசக்கோளாறுகள் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் குப்பைகளை முறையாக அப்புறப்பபடுத்தவும், வீடுகள் தோறும் தினசரி நேரடியாக குப்பைகளை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்