குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது

Update: 2022-07-02 16:07 GMT


பெருமாநல்லூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

பணம் பறிக்க முயற்சி

திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 32). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 3-ந்தேதி அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக காரில் வந்த 5 பேர் வேல்முருகனிடம் வழிகேட்டனர்.

திடீரென்று காரை விட்டு இறங்கி, வேல்முருகனை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன அவர் கூச்சல் போட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிவந்ததும், அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

குண்டர் சட்டம்

இது குறித்து பெருமாநல்லூர் போலீசில் வேல்முருகன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கத்தியை காட்டி மிரட்டிய தினேஷ்குமார் (24), ஈஸ்வரன் (38), முத்துக்குமார் (29), சரவணன் (22) மற்றும் தேவா என்கிற குருதேவா (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி 5 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்