கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை மங்களத்திற்கு மருத்துவ பரிசோதனை
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை மங்களத்திற்கு மருத்துவ பரிசோதனை
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை மங்களத்துக்கு கால்நடை துறை டாக்டர்கள் குழுவினர் நேற்று மருத்துவ பரிசோதனை செய்து, 6 மணிநேரம் தொடர்ந்து கண்காணித்தனர்.
மருத்துவ பரிசோதனை
கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மங்களம் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தமிழக அரசின் மருத்துவ முகாமிற்கு அழைத்து செல்லப்படாமல் கோவிலிலேயே வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின் பேரில் கால்நடை மருத்துவ அலுவலர் சிவகணேசன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் நேற்று ஆதிகும்பஸே்வரர் கோவில் யானை மங்களத்துக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது யானையின் உயரம், எடை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளின் செயல்பாடுகள் குறித்து 6 மணி நேரம் தொடர்ந்து கண்காணித்தனர். பின்னர் மங்களம் யானையின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்புவதாக டாக்டர் சிவ கணேசன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முழு உடல் தகுதியுடன்
யானை மங்களம் முழு உடல் தகுதியுடன் உள்ளது. இருப்பினும் அடிக்கடி சளி பிரச்சினை இருப்பதால் அதற்கு தேவையான இயற்கை மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு காட்டு யானை எப்படி செயல்பாட்டில் இருக்குமோ அதுபோல் யானை மங்களம் முழு திறனுடன் உள்ளது. தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோவில் யானைகள் அனைத்தையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
முழு அறிக்கை
அதன்படி தமிழகத்தில் உள்ள 20 மண்டலங்களில் கோவில் யானைகள் 30 பராமரிக்கப்படுவதை கண்காணித்து ஆய்வு செய்து முழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கோவில்செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், யானை பயிற்றுனர் அசோக் குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.