பழனி முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நாளை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெறுகிறது.

Update: 2023-01-25 20:35 GMT

பழனி,

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு முருகப்பெருமான் மலை மீது தண்டாயுதபாணியாக காட்சி அளித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சிறப்பு வாய்ந்த பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் பழனி முருகன் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

யாகசாலை பூஜைகள்

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. பின்னர் காலை 7.15 மணிக்கு பெருநிறை வேள்வி, தீபாராதனை, கட்டியம், கந்தபுராணம், பன்னிரு திருமுறை விண்ணப்பம் ஆகியவை நடக்கிறது. காலை 8.15 மணிக்கு மங்கல இசையுடன் யாகசாலையில் இருந்து சக்தி கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து தேவாரம் பன்னிசை, திருப்புகழ் பாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமியின் ராஜகோபுரம், தங்கவிமானத்தில் உள்ள கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

கோலாகலம்

அதன்பிறகு 8.45 மணிக்கு மலைக்கோவிலில் உள்ள தெய்வங்களின் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

தொடர்ந்து காலை 9.15 மணிக்கு மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் மதியம் 12.05 மணிக்கு அன்னப்படையல், தீபாராதனை, திருமறை, சிவஆகமம், கட்டியம், கந்தபுராணம், திருமுறை விண்ணப்பம் பாடப்படுகிறது.

16 ஆண்டுகளுக்கு பிறகு பழனியில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

2,500 போலீசார்

மேலும் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போலீஸ் சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்