ஆலந்துறையார் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

அரியலூரில் உள்ள ஆலந்துறையார் கோவில் கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

Update: 2023-05-30 18:41 GMT

ஆலந்துறையார் கோவில்

அரியலூர் நகரில் சிவன் கோவில் தெருவில் பிரசித்தி பெற்ற அருந்தவநாயகி உடனுறை ஆலந்துறையார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்றது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் சில இடங்களில் சேதம் அடைந்து காணப்பட்டது. அதனை சரி செய்து கும்பாபிஷேகம் நடத்தும் பணிகளை ஓம் நமச்சிவாய திருப்பணி குழு, ஸ்ரீ நரசிம்மர் டிரஸ்ட் மற்றும் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

கோவில் கொடிமரம் சேதமடைந்திருந்தது. இதையடுத்து புதிய கொடி மரம் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கோவில் ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டு 7 கலசங்கள் வைக்கப்பட உள்ளன.

நாளை கும்பாபிஷேகம்

கடந்த 25-ந் தேதி பரிவார தெய்வங்களுக்கு ருத்ர ஹோமம், அபிஷேகம், தீபாராதனை செய்யபட்டு கும்பாபிஷேக பணிகள் தொடங்கின. நேற்று காலை சிட்டிகை கடையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து கும்பாபிஷேக தீர்த்தங்கள் யானையின் மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பக்தர்கள் சிவன், பார்வதி, முருகர், விநாயகர் வேடமணிந்து மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் மார்க்கெட் தெரு, தேரடி, சத்திரம், வழியாக கோவிலை அடைந்தனர். இரவு 7 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. ராஜகோபுரத்தில் வைக்க உள்ள கலசங்கள் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் முழுவதும் வண்ண விளக்குகள், வர்ணங்கள் பூசு பணிகளும், தெப்பக்குளம் சுத்தம் செய்யும் பணியும் முடிந்துள்ளன. கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்