ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம்-அமைச்சர் சேகர்பாபு தகவல்
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருச்சி, ஜூன்.5-
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
புனரமைப்பு பணிகள்
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வருகை தந்தார். கோவிலில் வழிபட்ட அவர், அங்கு நடைபெறும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெக்காளியம்மன் .கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1.32 கோடி செலவில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கோவிலின் தூண்களில் ஒட்டப்பட்டிருந்த பளிங்கு கற்கள் அகற்றப்பட்டு, கருங்கல் தூண்கள் வைத்து பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
மலைக்கோட்டை கோவிலுக்கு ரோப் கார்
காங்கிரீட்டால் இருந்த வெக்காளியம்மன் வீற்றிருந்த கருவறை முற்றிலுமாக அகற்றப்பட்டு கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் நேரடிப் பார்வையில் திருப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சட்டசபையில் நடந்த மானிய கோரிக்கையின் போது ரூ.1,500 கோடி செலவில் ஆயிரம் கோவில்களை புனரமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆயிரம் ஆண்டுகள் பழமையான 80 கோவில்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த ஆண்டு மேலும் 2 ஆயிரம் கோவில்களை ஒரு கால பூஜை திட்டத்தில் சேர்த்து அனுமதித்து ரூ.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றில் இல்லாத வகையில் அரசின் சார்பில் ரூ.287 கோடி இந்து சமய அறநிலையத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்கு ரோப் கார் வசதி இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் உடன் இருந்தார்.