தடியார் உடையவர் கோவில் கும்பாபிஷேகம்

பரமக்குடி அருகே தடியார் உடையவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-10 18:45 GMT

பரமக்குடி,

பரமக்குடி அருகே தடியார் உடையவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தடியார் உடையவர் கோவில்

பரமக்குடி தாலுகா கோபாலபட்டினம் அஞ்சல் நயினார் கோவில் - சாலைக்கிராமம் மத்தியில் ராதாப்புலி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தடியார் உடையவர் கோவில் மகா கும்பாபிஷேக விழா கோவிலின் திருப்பணிக்குழு தலைவர் தொழில் அதிபர் சென்னை டாக்டர் ஏ.ஆர்.தர்மலிங்கம், அவரது மனைவி ராணி சங்குபதி தர்மலிங்கம், ஐகோர்ட்டு வக்கீல் டாக்டர் சசிக்குமார் - ரத்ன பாலா ஆகியோர் தலைமையில் நடந்தது.

ஸ்ரீகன்னி மூல கணபதி, ஸ்ரீகருப்பண்ணசாமி, ஸ்ரீஒய்யம்மை, ஸ்ரீ சோனையா, சப்த கன்னிகள், நாகராஜா, பைரவர், சோனைகளோடு கூடிய புஷ்பகலா ஆகிய தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பிள்ளையார்பட்டி சிவஸ்ரீ டாக்டர் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது. பின்பு காலை 9.45 மணிக்கு பரிவார விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.

பக்தர்கள் குவிந்தனர்

அப்போது கும்பாபிஷேகத்தை காண திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு சுவாமியை தரிசித்தனர். கலசங்களில் ஊற்றப்பட்ட புனித நீரை தீயணைப்பு வீரர்கள் குழாய்கள் மூலம் பக்தர்களுக்கு தெளித்தனர். பின்பு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகளும் தீபாராதனையும் நடந்தது.

முன்னதாக 8-ந் தேதி காலை 7 மணி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி காலை, மாலை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவிலின் திருப்பணி குழு தலைவர் தொழிலதிபர் ஏ.ஆர். தர்மலிங்கம் செய்திருந்தார். விழாவில் தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் அழகு ஜெயபால், அழகு பார்மசி செல்வராணி, லிரிஸ்குமார், தஷ்ரித், கமலேஸ், விஸ்ருதி, ஸ்யாம், திவ்யா, நாகராஜன் வளர்மதி, கணேசன் அனுஜா, சாலைக்கிராமம் ஊராட்சி மன்ற தலைவர் தங்கம், ஸ்ரீ தடியார் உடையவர் ஸ்டீல்ஸ் மோகனசுந்தரம், ஸ்ரீதடியார் உடையவர் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ரவி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்தும், சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருக்கல்யாண உற்சவம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர், திருப்பணி குழுவினர், கோவில் குடிமக்கள் செய்திருந்தனர். மாலையில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

அதைத் தொடர்ந்து வானவேடிக்கையுடன் சுவாமி வீதி உலா வந்தது. பின்பு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. கோவில் திருப்பணி மேற்பார்வையாளர் மேமங்களம் துரைப்பாண்டி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்