கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருக்கோவிலூர்,
ராமநாதீஸ்வரர் கோவில்
திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் மடவிளாகம் கிராமத்தில் சவுந்தர்ய ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ராமநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி திருப்பணிகள் நடைபெற்று முடிந்ததையடுத்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பிரவேசபலி மற்றும் முதல் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 2 மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜைகள், கும்ப பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.
கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக நாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சுமங்கலி பூஜை, நாடி சந்தனம், 4-ம் கால யாகசாலை பூஜைகளுடன் கடம்புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை 10.30 மணியளவில் ராமநாதீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட 5 கோபுரங்களிலும் உள்ள விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கண்டாச்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து இரவு 7 மணிக்கு திருகல்யாண உற்சவமும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கண்டாச்சிபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.