அபிராமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் இன்று தொடங்குகிறது.

Update: 2023-01-27 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாமாத்தூர். இக்கிராமத்தில் முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரர் கோவில் உள்ளது. 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலில், அரசர்களால் விடுபட்ட ராஜகோபுர திருப்பணியை பக்தர்களின் உதவியுடன் 110 அடி உயரமுள்ள ஏழு நிலைகள் அமைத்து 14.9.2005-ம் ஆண்டு விழுப்புரம் கயிலை ஆர்.குபேரன் செட்டியாரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேம் நடத்தப்பட்டு 17 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் தற்போது இக்கோவில் கோபுரங்களுக்கு பாலாலயம் செய்து திருப்பணிகள் நடந்து வந்தது. முத்தாம்பிகை அம்மன், அபிராமேஸ்வரர் கோவில்கள், புதிய பஞ்சவர்ண ராஜகோபுரம், விமானம் மற்றும் பரிவாரங்கள், விநாயகர், முருகன், அம்பாள் ஆகிய அனைத்து மூர்த்திகளுக்கும் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக விழா

இவ்விழாவானது இன்று (சனிக்கிழமை) அனுக்ஞை, கணபதி பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 1-ந் தேதி காலை 6 மணிக்கு அனைத்து பரிவார விமானங்கள், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், 9 மணிக்கு ராஜகோபுரங்கள், பிரதான விமானங்கள் மற்றும் விநாயகர், முருகன், சுவாமி அம்பாள், சண்டிகேஸ்வரர் சாமிகளுக்கு கும்பாபிஷேகமும், அவை முடிந்து காலை 11 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு சுவாமி அம்பாள் மகா அபிஷேகம், தீபாராதனை, இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இவ்விழாவை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், மதுரை ஆதீனம் 233-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீவளர் ஸ்ரீஹரிகர ஸ்ரீஞான சம்மந்ததேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், தருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க பண்டார சன்னதி சுவாமிகள், கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை கவுமார மடாலய சிறவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர அடிகளார், திருக்கயிலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103-வது குரு மகா சன்னிதானம் சச்சிதானந்த சுவாமிகள், வேலூர் ரத்தினகிரி பாலமுருகன் கோவில் தவஞானி பாலமுருகனடிமை சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரிய சுவாமிகள், வானூர் திருச்சிற்றம்பலம் கைலாசநாதர் கோவில் தணிகாசலம் சுவாமிகள், திருவாமாத்தூர் மகான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கவுமார மடாலய தண்டபாணி சுவாமிகள் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர்.

அமைச்சர்கள் பங்கேற்பு

இவ்விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, செஞ்சி மஸ்தான் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருவாமாத்தூர் ஏழுநிலை ராஜகோபுர திருப்பணி கமிட்டி முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ஆர்.குபேரன் செட்டியார், கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் பல்லவி மற்றும் கோவில் பணியாளர்கள், திருவாமாத்தூர் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்