ஆரணி அருகே சுயம்பு ஆபத்சகாயேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஆரணி அருகே சுயம்பு ஆபத்சகாயேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தில் ஆற்றங்கரையில் ஸ்ரீ தெய்வநாயகி சமேத சுயம்பு ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் யாக மண்டபம் அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து மூன்று கால யாக ஹோம பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் புனித நீர் கலசங்களை பூதகண வாத்தியங்களுடன் கோவிலை சுற்றி வலம் வந்து புதிதாக அமைக்கப்பட்ட ராஜகோபுரம், கருவறை கோபுரம், பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தினர்.
இதில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் சாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.