நெய்குளம் கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நெய்குளம் கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கல்லக்குடி, செப்.8-
புள்ளம்பாடி அருகே நெய்குளம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு மகாகணபதி, மூப்பனார், ஊர் சுத்தியான் கருப்பண்ணசாமி மற்றும் கன்னிமார் ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன. இங்கு திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்ததையொட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 6-ந்தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணி அளவில் 2-ம் கால யாகபூஜை, காலை 9.45 மணிக்கு யாத்திரா தானம், கடம் புறப்பாடு செய்து 10 மணி அளவில் அனைத்து கோபுர விமான கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின் 10.25 மணி அளவில் மூலதான சாமிகளுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி அசோகன், துணைத்தலைவர் பாக்கியராஜ், ஊராட்சி செயலாளர் கண்ணுசாமி, வார்டுஉறுப்பினர்கள், நெய்குளம், நெடுங்கூர், ஊட்டத்தூர், நம்புகுறிச்சி, பெருவளப்பூர், ரெட்டிமாங்குடி, கண்ணாக்குடி, பாடாலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம காரியஸ்தர்கள், கோவில் குடிமக்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.