கிணத்துக்கடவு அருகே மாகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்-திரளான பக்தர்கள் தரிசனம்

கிணத்துக்கடவு அருகே மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-02 01:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மாகாளி அம்மன் கோவில்

கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைத்து கோபுரங்கள் அமைக்க முள்ளுபடி ஊர் பரம்பரை அறங்காவலர், கோவில் நிர்வாகம், பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி ஸ்ரீ மாகாளி அம்மன் கோவில் புனரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது கோவில் கோபுரம் அமைக்கப்பட்டு கோவில் முழுவதும் கல்லினால் அமைக்கப்பட்ட மாகாளியம்மன் கோவில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்தநிலையில் புனரமைக்கப்பட்ட கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 29-ந் தேதி மாலை 6 மணிக்கு மங்கல இசை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை உடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது. நேற்று காலை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோபூஜை, பூர்ணாகுதி பூஜையும், அதனைத் தொடர்ந்து தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மேல் 2-ம் கால யாக பூஜையும், புதிய மூர்த்தி களுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு மேல் கோபுரம் மீது கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாக பூஜை நடந்தது. இரவு 7 மணிக்கு மேல் அஷ்டபந்தன மருந்துகள் சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

நேற்று அதிகாலை 5.30 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், நாடி சந்தானம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மேள தாலங்கள் முழங்க கோபுரத்திற்கு புனித நீர் கலசங்கள் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் கரகோஷம் முழங்க ராஜ கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதையொட்டி பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் விநாயகர், ஸ்ரீ மாகாளி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாகாளியம்மனுக்கு அலங்கார பூஜையும், அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முள்ளுப்பாடி ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர், கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்