ஹெத்தப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா

கோத்தகிரி அருகே ஹெத்தப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2022-06-12 14:27 GMT

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே ஹெத்தப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கும்பாபிஷேக விழா

கோத்தகிரி அருகே சுள்ளிக்கூடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஹெத்தப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் மக்கள் மற்றும் கோவில் கமிட்டியினர் முடிவு செய்தனர். இதையடுத்து கோவிலில் திருப்பணிகள் நடந்து, வர்ணம் பூசும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. தொடர்ந்து ஹெத்தப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இரவு 10 மணிக்கு ஓரநள்ளி பூமாதேவி பஜனை குழுவினரின் பஜனை நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கணபதி வழிபாடு, யாக பூஜை, 5 மணிக்கு யாக பூஜை, நாடி சந்தானம், 16 வகை திரவிய அபிஷேகம், கணபதி அதர்வசீர்ஷ ஹோமம், சர்வதேவதா ஹோமம், மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து கம்ப கலசம் புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இட்டக்கல் மடத்தை சேர்ந்த சிவகுமார சுவாமி தலைமையில், விமான கோபுரத்தில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

பக்தர்கள் தரிசனம்

கலச கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடந்ததுடன், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் ஹெத்தப்பன் சுவாமிக்கு அலங்கார பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஹெத்தப்பனை தரிசனம் செய்தனர்.

இந்த கோவில் வளாகத்தில் உள்ள மகாலிங்க சுவாமி கோவில் திருவிழா இன்று (திங்கட்கிழமை)நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு கலச பூஜை, 6.30 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை, 7 மணிக்கு தேர் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 3 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு சுள்ளிக்கூடு கிராம மக்களின் சிறப்பு பூஜை, 10 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் கோவில் கமிட்டியினர், ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்