கல்லக்குடி பசுபதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை தொடங்கியது
கல்லக்குடி பசுபதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை தொடங்கியது
கல்லக்குடியில் பிரசித்திபெற்ற நித்தியகல்யாணி சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. சோழ பேரரசின் வழிவந்த ராஜமாதா செம்பியன் மாதேவியாரால் கட்டப்பட்ட இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி கடந்த 18-ந்தேதி தேதி விநாயகர்பூஜை, மகாகணபதி ஹோமம்,விநாயகர் சிறப்பு அபிஷேகம் தீபாராதனையுடன் முகூர்த்தக்கால் நடப்பட்டு பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை தொடங்கியது. முன்னதாக விநாயகர் வழிபாடு, கோபூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் நடந்தது. தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் முதல் கால யாகபூஜை தொடங்கியது. தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் விநாயகர் வழிபாடு, 2-ம் கால யாகபூஜை நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணி அளவில் 3-ம் காலயாகபூஜை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான நாளை (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக அதிகாலை 4.30 மணியளவில் 4-ம் கால யாகபூஜையும், கடம்புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சிவன் கோவில் அருகில் உள்ள விநாயகர் கோவில்,மால்வாய் ரோடு ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில், மதுரகாளியம்மன் பெரியசாமி கோவில் மஹாகும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து 8 மணியளவில் சிவாலய யாகசாலையில் நாடி சந்தனம் சிவாலய நான்காம் சமர்ப்பணம் செய்யப்பட்டு 9.05 மணியளவில் நல்லசெல்லியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், திரவுபதி அம்மன், அய்யனார் கோவில், மாரியம்மன், எல்லையம்மன்,ஓம்சக்தி கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. பின்னர் காலை 11 மணி அளவில் நித்ய கல்யாணி உடனுறை பசுபதீஸ்வரர் ஆலய பரிவார விமானகலசங்களுக்கும், தொடர்ந்து மூலஸ்தானங்களுக்கும் மஹாகும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இரவில் சாமி புறப்பாடு நடக்கிறது. கும்பாபிஷேகத்தை தண்டபாணி என்கிற கோபி சிவாச்சாரியார் தலைமையில் ஆலய குருக்கள் ராதாகிருஷ்ணன், விஸ்வநாதன் ஆகியோர் நடத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலயதிருப்பணி குழுவினர்,கிராம முக்கியஸ்தர்கள்,பொதுமக்கள் செய்து வருகின்றனர்.