முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எஸ்.புதூர் அருகே வாராப்பூர் கட்டையம்பட்டி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
எஸ்.புதூர் அருகே வாராப்பூர் கட்டையம்பட்டி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முத்துமாரியம்மன் கோவில்
எஸ்.புதூர் ஒன்றியம், வாராப்பூர் கிராமம் வா.கட்டையம்பட்டி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் கடந்த 6-ந்தேதி காலை பகவதி அனுக்ஞை, விபரானுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், புண்யாகவாசனம், தனபூஜை, வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரஹணம், கலாகர்ஷனம், கும்ப அலங்காரம், முதல்கால யாகபூஜைகள், வேதபாராயணம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று காலை விக்னேஸ்வரபூஜை, ரக்ஷாபந்தனம், நாடிசந்தானம், ஸ்பரிஷாகுதி, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, வேதபாராயணம், ஆகம விண்ணப்பம், திருமுறை விண்ணப்பம், உபசார பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டு பெண்கள் குலவை போட கடங்கள் புறப்பாடு நடந்தது.
கும்பாபிஷேகம்
புனிதநீர் குடங்கள் கோவிலை வலம் வந்து கருடன் வானில் வட்டமிட முத்துமாரியம்மன் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் கோபுர கலசங்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து மூலவர் முத்துமாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்துடன் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், வாராப்பூர் ஊராட்சி தலைவர் மலர்விழி நாகராஜன், தொழில் அதிபர் நவநீதகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய சேர்மன் வி.பி.ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வா.கட்டையம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா குழுவினர், இளைஞர்கள், வா.கட்டையம்பட்டி பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் உலகம்பட்டி போலீசார் ஈடுபட்டிருந்தனர்.