குமரி: குடும்ப பிரச்சனை காரணமாக தாய் தீக்குளித்து தற்கொலை

அருமனை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் ,மகள் படுகாயம் அடைந்துள்ளார்.

Update: 2022-06-17 16:09 GMT

அருமனை,

குமரி மாவட்டம், அருமனை அருகே அண்டுகோட்டை பகுதியை சேர்ந்தவர் கிஷோர்.இவரது மனைவி சகி(வயது 38).இவர்களது மகள் சாய் கிருஷ்ணா (10). தற்போது ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கிஷோர் மற்றும் மனைவி சகி ஆகியோருக்கு இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளதாகவும் அதனால் இருவரும் ஒரே வீட்டில் தனி தனியாக வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் இரு குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர்.இதனால் மனைவி மிகவும் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தை சாய் கிருஷ்ணா தாயாருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கிஷோரின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்த போது சகி மற்றும் அவரது மகள் படுத்திருந்த அறையில் இருந்து நெருப்பு புகை வந்து கொண்டிருந்தது.

பொது மக்கள் கதவை உடைத்து பார்த்தபோது சகியின் உடல் எரிந்து கொண்டிருந்தது.மகள் தீ காயத்தால் துடித்துக் கொண்டிருந்தார். உடனே அவர்கள் சாய் கிருஷ்ணாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அருமனை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போது சகி உடல் முழுவதும் எரிந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

போலீசார் அவரது உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.படுகாயமடைந்த மகள் சாய் கிருஷ்ணா திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்