சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் குமரி திருவிழா;கலெக்டர் தகவல்
குமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் குமரி திருவிழா நடைபெற உள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் குமரி திருவிழா நடைபெற உள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
குமரி மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் இணைந்து கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் குமரி திருவிழா 2023 நிகழ்ச்சி நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசியபோது கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சி போலவும், சேலம் மாவட்டம் ஏற்காடு, கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய பகுதியில் நடைபெறும் கோடைவிழா போன்றும் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன், குமரி திருவிழா 2023 நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
கலை நிகழ்ச்சிகள்
விழாவானது அனைவரையும் ஈர்க்கும் வகையில் சிறப்பாக நடத்திட அனைத்துத் துறையினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். குறிப்பாக காவல்துறையினர் குமரி திருவிழா நடைபெறும் நாட்களில் பாதுகாப்பு வழங்குவதோடு சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகன நிறுத்தங்களை மாற்றி அமைக்க வேண்டும். சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், மீன்வளத்துறை, ஆவின், கைவினை பொருட்கள் வளர்ச்சிக்கழகம், கைத்தறி உள்ளிட்ட துறைகள் மூலம் அரங்கம் அமைக்க சுற்றுலா துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழா மேடை, ஒளி, ஒலி வசதிகள் உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும், நிகழ்ச்சி நடைபெறும் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் குமரி மாவட்டம் மற்றும் அருகாமையிலுள்ள மாவட்டத்திற்குட்பட்ட கலைஞர்களை கொண்டு கலைநிகழ்ச்சி நடத்த வேண்டும்.
வெற்றிகரமாக
அந்தந்த துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக மேற்கொண்டு குமரி திருவிழா 2023 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) பாபு, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், இணை இயக்குனர் (வேளாண்மை) ஹனி ஜாய் சுஜாதா, துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) ஷீலா ஜாண், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.