குமரி மாவட்ட மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு

மருத்துவ குணமிக்க குமரி மாவட்ட மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-07-31 18:45 GMT

திருவட்டார்:

மருத்துவ குணமிக்க குமரி மாவட்ட மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மருத்துவ குணமிக்கது

குமரி மாவட்டத்தில் வாழை விவசாயம் அதிக அளவில் நடந்து வருகிறது. அதில் செவ்வாழை, நேந்திரம், பாளையங்கோட்டை, பேயன், ரஸ்தாளி, சிங்கன், பூவன் மற்றும் மருத்துவ குணம் கொண்ட மட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை ரகங்கள் பயிரிடப்படுகிறது.

மட்டி வாழை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆரம்பத்தில் விளைந்த காட்டு ரக வாழை ஆகும். அது மெல்ல, மெல்ல நாட்டு பகுதிகளுக்கும் பரவியது. மட்டியின் சிறப்பே அதன் ருசியும், மணமும் தான். வேறு எந்த வகை வாழைப்பழத்திலும் மட்டி மாதிரி மணம் வீசுவது இல்லை.

குழந்தைகளுக்கு ஏற்றது

முன்பு பேச்சிப்பாறை, குலசேகரம், அருமனை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மட்டுமே மட்டி வாழைகளை பயிரிட்டனர். ஆனால் தற்போது குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மட்டி வாழைகளை அதிகமாக பயிரிடுகிறார்கள். இதனால் எப்போதும் சந்தையில் கிடைக்கும் பழ ரகங்களில் ஒன்றாக மட்டி விளங்குகிறது.

மருத்துவ குணம் கொண்ட மட்டி ரக வாழைப்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை என்பதால் பச்சிளம் குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை அனைவரும் சாப்பிடலாம். இந்த வாழைப்பழத்தின் தோல், பொதுவாக மஞ்சள் நிறத்தில் காணப்படும். இது தவிர இனிப்பு சுவையும், மணமும் கொண்டதாக மட்டி வாழைப்பழம் இருப்பதால் குமரி மாவட்டத்தில் மட்டிப்பழத்தை குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி அளிப்பார்கள். முதன் முதலாக குழந்தைகளுக்கு மட்டி வாழை பழத்தை நசுக்கி கொடுக்கும் பழக்கம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

சிறியதாக இருக்கும்

மட்டி வாழையை நட்ட 11 முதல் 12 மாதங்களில் குலையை அறுவடை செய்யலாம். தார்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 12 சீப்புகளுடன், 120 முதல் 150 பழங்கள் வரை இருக்கும். ஒவ்வொரு தாரும் 12 கிலோ முதல் 15 கிலோ எடை இருக்கும். மட்டி வாழைப்பழம் அளவில் சிறியது. ஒவ்வொரு பழமும் 40 கிராம் முதல் 60 கிராம் எடைவரை இருக்கும்.

மட்டிப்பழம் பற்றிய நிகழ்வு ஒன்றும் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது திருவனந்தபுரத்துக்கு வருகை தந்தார். அப்போது நடந்த விருந்தில் அவருக்கு குமரி மாவட்ட ஸ்பெஷல் மட்டிப்பழம் வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்டு பார்த்த அவர், இவ்வளவு ருசியான வாழைப்பழம் நான் சாப்பிட்டதே இல்லை என அவர் பெருமைப்பட கூறியுள்ளார். இத்தகைய சிறப்புமிக்க மட்டிப்பழத்துக்கு தான் தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்த பழத்தை மேலும் பெருமைப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. இதன்மூலம் இந்த பழத்தின் பெருமை உலக அளவில் பரவும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

மகிழ்ச்சி

மட்டி பழத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்தது குறித்து திசு வளர்ப்பு முறையில் தயாரான வாழைகளை இயற்கை விவசாய முறையில் பயிரிடும் எறும்புக்காட்டை சேர்ந்த விவசாயி மீனாட்சி சுந்தரம் என்பவர் கூறுகையில், "குமரி மாவட்டத்தின் மண் மட்டி வாழைகள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே மட்டி வாழைப்பழத்துக்கு புவிசார் குறியீடு அளித்திருக்க வேண்டும். தாமதமானாலும் தற்போதாவது இந்த வாழைக்கு புவிசார் குறியீடு அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது என்னை போன்ற வாழையை விரும்பும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். இனி பிற மாவட்ட விவசாயிகள் மட்டி வாழையை விரும்பி பயிரிடுவார்கள். இதற்கான முன்னேற்பாடுகளை தோட்டக்கலைத்துறை செய்ய வேண்டும். தேசிய வாழை ஆராய்ச்சி மையம் மூலமாக திசு வளர்த்தல் முறையில் அதிகமான மட்டி வாழைக்கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கினால் தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் மட்டி வளர்வதற்குரிய வாய்ப்பு உள்ளது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்