குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கலைநிகழ்ச்சிகளில் ஆபாச நடனத்தை அனுமதிக்க கூடாது
குலசேகரன்பட்டினத்தில் தசரா குழுவினரின் கலைநிகழ்ச்சியில் ஆபாச நடனத்தை அனுமதிக்கக்கூடாது என்று ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினத்தில் தசரா குழுவினரின் கலைநிகழ்ச்சியில் ஆபாச நடனத்தை அனுமதிக்கக்கூடாது என்று ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்கி, 12 நாட்கள் நடக்கிறது. 10-ம் திருநாளான அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி நள்ளிரவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி தசரா குழுவினருக்கான ஆலோசனை கூட்டம், குலசேகரன்பட்டினம் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.
கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற தசரா குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதன் விவரம் வருமாறு:-
ஆபாச நடனத்தை அனுமதிக்கக்கூடாது
தசரா விழா நாட்களில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தசரா குழுவினரின் கலைநிகழ்ச்சியில் ஆபாச நடனத்தை அனுமதிக்கக்கூடாது. சூரசம்ஹாரத்துக்கு மறுநாளும் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும்.
வேடம் அணிந்து வரும் பக்தர்கள் இரும்பாலான ஆயுதங்களை எடுத்து வரக்கூடாது. சாதி அடையாளம் பொறிக்கப்பட்ட கொடிகள், சீருடை அணிந்து வரக்கூடாது. அதிக ஒலி எழுப்பும் மேளதாளம் இசைக்க கூடாது.
சிறப்பு ரெயில்
பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக தற்காலிக கழிப்பிடங்களை அமைக்க வேண்டும். மருத்துவ வசதிகளையும் அதிகப்படுத்த வேண்டும். பக்தர்கள் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும். கடற்கரையில் பெண்களுக்கு உடை மாற்ற தனி இடம் ஏற்படுத்த வேண்டும்.
விழா நிகழ்ச்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள், யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். வெளியூர்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்.
மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தசரா குழுவினர் வலியுறுத்தினர்.