குறுகலான பாலத்தால் விபத்து அபாயம்

Update: 2023-08-16 18:01 GMT


கொழுமம், குமரலிங்கம் பகுதிகளிலிருந்து மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு வழியாக தாராபுரம் செல்லும் முக்கிய வழித்தடம் உள்ளது.இந்த சாலையே மடத்துக்குளத்திலிருந்து அமராவதி, ஆனைமலை உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் வழித்தடமாகவும் உள்ளது.இதுதவிர இந்த வழித்தடத்தில் ஏராளமான விவசாய கிராமங்கள் உள்ளது.

இதனால் இந்த சாலை வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.அத்துடன் நூற்பாலைகள், காகித ஆலைகள், தென்னை நார் தொழிற்சாலைகள் போன்றவற்றின் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திப்பொருட்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் இந்த சாலையில் தினசரி பயணிக்கின்றன.

இந்த சாலையில் மடத்துக்குளம்-குமரலிங்கத்துக்கு மத்தியில் சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் பிரிவுக்கு அருகில் உள்ள மழைநீர் ஓடைக்கு மேல் பாலம் ஒன்று அமைந்துள்ளது.இந்த பழமையான பாலம் மிகவும் குறுகலாக உள்ளது.இதனால் கனரக வாகனங்கள் இந்த பாலத்தைக் கடக்கும்போது எதிரே வரும் வாகனங்கள் திணறும் நிலை உள்ளது.இந்த பாலத்தின் வழியாக விவசாயிகள் அறுவடை எந்திரங்கள் மற்றும் விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கு சிரமங்களை சந்திக்கின்றனர்.அதிலும் இந்த பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்களில் பிரதிபலிப்பான்கள் பொறுத்தப்படாததால் இரவு நேரங்களில் விபத்துகள் நடைபெறும் அபாயம் உள்ளது.நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், இந்த பாலத்தை அகலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்