மத்திய அரசை கண்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் -கே.எஸ்.அழகிரி அழைப்பு

மத்திய அரசை கண்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2023-06-13 21:57 GMT

சென்னை,

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதிகாரப்பூர்வ அரசு இல்லம், அலுவலகத்தில் சோதனை நடத்துவதற்கு அடிப்படையான காரணம் வேண்டும். இந்த ஒரு மாத காலத்தில் நீங்கள் சோதனை நடத்தி எதாவது கிடைத்திருந்தால் இந்த சோதனையை சரி என்று சொல்லலாம். தி.மு.க.வும், அதன் தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மத்திய பா.ஜ.க. அரசை அகற்ற வேண்டும் என்று சொல்லிவருகின்றனர்.

எனவே அவரையும், அவரது ஆட்சியையும் பயமுறுத்துவதற்காக இந்த சோதனையை நடத்துகிறீர்களா? மு.க.ஸ்டாலினின் பெயரே சோவியத் ரஷியாவின் அதிபரின் பெயர். எதற்கும் அஞ்சாத, கலங்காத பெயர். அவருடைய பேராண்மையை நீங்கள் ஆட்டிப்படைக்க வேண்டும், அசைக்க வேண்டும் என நினைக்கிறீர்களா என்று தெரியவில்லை.

மிகப்பெரிய தவறு

தமிழகத்தில் இருக்கிற மத்திய மந்திரி மீது ஏதேனும் புகார்கள் வந்து, அதன் பேரில் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக போலீஸ்துறை, உளவுத்துறை டெல்லியில் இருக்கிற மந்திரியின் அறையில் சோதனை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? இது கூட்டாட்சி தத்துவம் உள்ள நாடு. உங்களுக்கு மின்சாரத்துறை அமைச்சர் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஆதாரங்கள் இருந்தால் நீங்கள் முதல்-அமைச்சரிடமே நேரடியாக பேசி, அவரை விசாரணைக்கு ஆஜராக சொல்லுங்கள். பதவியில் இருந்து நீக்குங்கள் என்று எந்தவொரு ஆலோசனைகளை சொல்லவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது.

எந்த தவறு நடந்தாலும் பார்த்துக்கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உங்கள் அமைச்சரவையில் இதுபோன்ற தவறுகள் நடக்கிறது என்று முதல்-அமைச்சரிடம் சொல்லலாம். அவர் விசாரிப்பதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் தயாராக இருக்கிறார். ஆனால் மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதும், அவர்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்க நினைப்பதும் மிகப்பெரிய தவறு என்று தமிழ்நாடு காங்கிரசின் சார்பில் கூறிக்கொள்கிறேன்.

உண்ணாவிரதம் இருங்கள்

நான் தேவைப்பட்டால் தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு ஆலோசனையை வழங்குவேன். இந்த நிலை தொடர்ந்தால் பொதுவெளிக்கு வந்து மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருங்கள். தமிழக மக்கள் உங்களோடு இருப்பார்கள்.

ஏனென்றால் எந்த சர்வாதிகாரத்தையும் ஏற்றுக்கொள்ள கூடாது. தமிழர்களின் பாரம்பரியம், தொன்மை, நாகரீகம் என்பது அடிபணிவது கிடையாது. நாங்கள் சட்டத்துக்கு கட்டுப்படுவோம். சட்டம் என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக்கொள்வோம். ஆனால் அடிபணிய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எச்சரிக்கையாக சொல்கிறேன்.

இவ்வாறு அவர் வீடியோ பதிவில் பேசி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்