கிருஷ்ணகிரியில்பழையபேட்டை கிருஷ்ணர் கோவில், லட்சுமி நாராயண சாமி கோவில், தர்மராஜா கோவிலில், கிருஷ்ணருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து உற்சவர், பழையபேட்டை, நரசிம்மசாமி கோவில் தெரு, நேதாஜி சாலை, மகாராஜகடை சாலை வழியாக தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வேணுகோபால் சாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்தனர்.
பஜனையை தொடர்ந்து கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த குழந்தைகள் பூந்தோட்டம் முத்து மாரியம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். இதே போல வீடுகளிலும் கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. வீடுகளில் கிருஷ்ணருக்கு சீடை, முறுக்கு படைத்து வழிபட்டனர். மேலும் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பெற்றோர் மகிழ்ந்தனர்.
பழையவூர்
கிருஷ்ணகிரிைய அடுத்த பழையவூர் கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை மகா கணபதி பூஜையும், மாலை கோபுர கலசத்தில் தானியம் நிரப்பும் நிகழ்ச்சி நடந்தது. இரவு கிருஷ்ணர் தாலாட்டு பூஜைகள் நடந்தது.
நேற்று காலை பூஜையும், காலை 7 மணிக்கு யாக பூஜையும் நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 9.15 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், மகா மங்கள ஆரத்தி பூஜையும் நடந்தது. இதில் பழையவூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பர்கூர்
பர்கூர் அருகே உள்ள கோகுல் நகர் கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணன் வேடமிட்டு ஆலயத்தை வலம் வந்தனர். கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து நடனம் ஆடினார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஓசூர்
ஓசூரில் பாகலூர் ரோடு சர்க்கிளில் உள்ள கிருஷ்ண சாமி கோவில், ஏரித்தெருவில் உள்ள வேணுகோபால சாமி கோவில் உள்ளிட்ட கிருஷ்ணர் கோவில்களில், சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல், விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளின் சார்பில்,ஓசூர் ஜி.ஆர்.டி சர்க்கிள் அருகே கிருஷ்ணர் சிலை வைத்து 3 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது சிறுவர், சிறுமியர், கிருஷ்ணர் போல் வேடமணிந்து ஊர்வலத்தில் சென்றது, பொதுமக்களை மிகவும் கவர்ந்தது.