கோவில்பட்டி, சாத்தான்குளத்தில்விநாயகர் சிலைகள் ஊர்வலம்

கோவில்பட்டி, சாத்தான்குளத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

Update: 2023-09-21 18:45 GMT

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி, சாத்தான்குளத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி

கோவில்பட்டியில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் நகரம் மற்றும் கிராமப் பகுதியில் 25 இடங்களில் விநாயகர் சிலைகள் கடந்த 18-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று காலையில் விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இனாம் மணியாச்சி சந்திப்பிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டன.

தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ண சர்மா தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் மாநில துணை தலைவர் வி. புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஊர்வலம் மெயின் ரோடு, புது ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக செண்பகவல்லி அம்மன் கோவிலை அடைந்தது. அங்கிருந்து மாலையில் விநாயகர் சிலைகள் வேம்பார் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கிங்ஸ்லி தேவானந்த், வனசுந்தர், பத்மாவதி மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சாத்தான்குளம்

சாத்தான்குளம் பகுதியிலும், ஆழ்வார்திருநகரி யூனியன் பேய்க்குளம் பகுதியிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. இதில் சாத்தான்குளம் பகுதியில் 19 சிலைகளும், பேய்க்குளம் பகுதியில் 200 வீடுகளிலும், 17 இடங்களில் 5 அடி முதல் 7அடி வரையிலான சிலைகளும், சாத்தான்குளம், தட்டார்மடம் பகுதியில் 19 விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. இந்த சிலைகள் சாத்தான்குளம் விநாயகர் கோவில் முன்பிருந்து வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.

திருச்செந்தூர் கடலில் கரைப்பு

ஊர்வலம் பழைய பஸ் நிலையம், பஜார், சி.எஸ்.ஐ. சர்ச், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கு சென்றடைந்தது. இதில் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் உள்ளிட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அனைத்து சிலைகளும் திருச்செந்தூர் கடலில் கரைக்கப்பட்டன.

சாத்தான்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு அருள் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்