கொங்குகூர் உக்கிர காளியம்மன் கோவிலில் போலி உண்டியல் வைத்தும் மோசடி

Update: 2023-04-25 14:54 GMT


தாராபுரம் அருகே உள்ள கொங்கூர் உக்கிர காளியம்மன் கோவிலில் அறங்காவலர் என கூறிக்கொள்ளும் ஒருவர் கோவிலுக்கு சொந்தமான 300 பவுன்நகை, நிலங்களை முறைகேடாக பயன்படுத்துவதாகவும், போலி உண்டியல் வைத்து பக்தர்களின் காணிக்கை பணத்தை மோசடி செய்வதாகவும், அவர் மீது நடவடிக்கை கோரி கோவில் குலத்தவர்கள் தாராபுரம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

உக்கிர காளியம்மன்

தாராபுரத்தை அடுத்துள்ள கொங்கூரில் உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டு பழமையானது. இந்த கோவில் குலத்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று தாராபுரம் வந்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொங்கூர் உக்கிர காளியம்மன் 1000 ஆண்டு பழமையானது. இந்த கோவிலில் பரம்பரையாக 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வழிபட்டு வருகிறோம். இந்த கோவிலில் பரம்பரை அறங்காவலர் என கூறும் ஒருவர் சட்டவிரோதமாக பெயர் பலகை வைத்ததுடன், தனி உண்டியல் வைத்து அதன் மூலம் லட்சக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும் கோவிலுக்காக பக்தர்கள் கொடுத்த 300 பவுன் நகைகளும், முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி கோவிலுக்கு சொந்தமான நிலங்களையும் முறைகேடாக அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் 500 ரூபாய் கொடுத்து பிரசாத பைகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறார்.

முறைகேடு

கோவில் பெயரை பயன்படுத்தி பல கோடி ரூபாய் நிதி வசூல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே கோவிலை ஆக்கிரமித்துள்ள அறங்காவலர் என்று கூறிக்கொள்பவரும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்றொருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடம் இருந்து பக்தர்கள் செலுத்திய தங்கம் மற்றும் போலி உண்டியல், போலிரசீது, திருக்கோவில் நிலங்கள் ஆகியவற்றை மீட்டுஉக்கிர காளியம்மன் கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பாக உரிய நடவடிக்கை இல்லையென்றால், அக்கோவில் வழிபாடு செய்யும் மக்களை திரட்டி, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்