திருப்பூர் அருகே உள்ள எஸ்.குப்பிச்சிபாளையத்தில் கருப்பராயன்-கன்னிமார்சாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகம்
திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட எஸ். குப்பிச்சிபாளையத்தில் அமைந்துள்ள விநாயகர், கருப்பராயன், கன்னிமார்சாமி கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு கோ பூஜை, விநாயகர் பூஜை, கணபதி ஹோமமும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி மற்றும் புனித தீர்த்தம் எடுத்தல் வரும் நிகழ்வுகளும் நடைபெற்றது.
நேற்று காலை 5 மணிக்கு 2-ம் கால பூஜையும், விநாயகர் பூஜையும், புன்யாகவாஜனமும், 2-ம் கால யாகசாலை பூஜையும், சாமி சிலைகளுக்கு கண் சிறப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து நேற்று காலை 6 மணி முதல் மகா பூர்ணாஹூதியும், அதனை தொடர்ந்து மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
அன்னதானம்
பின்னர் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், கருப்பராயன், கன்னிமார் சாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 12 நாட்களுக்கு மண்டல பூஜை மதியம் 12 மணிக்கு நடைபெறுகின்றன. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்