மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-05-05 21:38 GMT

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

கிரிவலம்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை சென்னிமலை முருகன் கோவில் கிரிவல பக்தர்கள் சார்பில் அய்யம்பாளையம் பழனி ஆண்டவர் கோவிலில் சாமிக்கு அபிஷேக பூஜை நடைபெற்றது. பின்னர் மாலையில் அடிவாரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் புறப்பட்டு கிரிவலம் சென்றனர். கிரிவலம் நிறைவு பெற்ற பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சொக்கநாதபாளையம் மாரியம்மன்

சென்னிமலை அருகே உள்ள சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது. பக்தர்கள் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மடவிளாகத்தில் உள்ள ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.

பின்னர் தீர்த்த குடங்களுடன் நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

எக்கட்டாம்பாளையம் மாரியம்மன்

எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நட்டாற்றீஸ்வரன் கோவிலுக்கு சென்று காவிரி தீர்த்தம் கொண்டு வந்தனர். பின்னர் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு சந்தன அபிஷேகம், தீப அலங்கார ஆராதனை மற்றும் தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் காவிரி கரையில் அமைந்துள்ள பழமையான செல்லாண்டியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமிையயொட்டி நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. காலை 11 மணி அளவில் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பலர் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் கோவிலுக்கு சென்று வேண்டுதல் நிறைவேற்றினர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு சிறப்பு அலங்காரத்தில் செல்லாண்டியம்மன் அருள் பாலித்தார். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இரவு பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து அம்மனை வழிபட்டனர்.

அம்மாபேட்டை

அம்மாபேட்டையில் உள்ள அகோர வீரபத்திரசாமி கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி தெப்பத்தேர் விழா நடந்தது. நேற்று காலை விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்கியது.

மதியம் அகோர வீரபத்திர சாமியை தெப்பத்தேரில் வைத்து ஆற்றின் கரையில் அமைந்துள்ள மீனாட்சி உடன் சொக்கநாதர் ஆலயத்துக்கு பரிசல்கள் புடை சூழ அழைத்து வந்தனர். இதைக்காண சென்னை, சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-ம் தேதி மாலை அம்மை அழைத்தல், முளைப்பாலிகை ஊர்வலம் நடைபெற்றது. நேற்று காலை 6 மணியளவில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். காலை 9 மணியளவில் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். 12 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி அளவில் பக்தர்கள் பலர் முதுகில் அலகு குத்தி சிறிய தேர்களை இழுத்து வந்தனர். இரவு 9 மணி அளவில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) காலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

அந்தியூர் பத்ரகாளியம்மன்

அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பிரசித்திபெற்ற பத்ரகாளி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 6 மணி அளவில் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அந்தியூர், தவிட்டுப்பாளையம், வெள்ளித்திருப்பூர், அத்தாணி, ஆப்பக்கூடல் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல் வழங்கப்பட்டது.

இதேபோல் அந்தியூர் பேட்டை பெருமாள் கோவிலிலும் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. 

Tags:    

மேலும் செய்திகள்