ஈரோட்டில் நாளை மஞ்சள் நீராட்டு விழா: பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம்

ஈரோட்டில் நாளை மஞ்சள் நீராட்டு விழா: பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம்

Update: 2023-04-06 21:08 GMT

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் வகையறா கோவில்களான நடுமாரியம்மன் (சின்னமாரியம்மன்), வாய்க்கால் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. கோவில்களில் கடந்த 25-ந் தேதி கம்பம் நடப்பட்டது. அதைத்தொடர்ந்து பெரிய மாரியம்மன் கோவிலில் 24 மணி நேரமும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றியும், பால் ஊற்றியும் வேண்டுதல் நிறைவேற்றி வருகிறார்கள். ஈரோடு மட்டுமின்றி கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு வந்து கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றுகிறார்கள்.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். குண்டம் திருவிழா, தேர்த்திருவிழா மற்றும் பொங்கல் திருவிழா நிறைவடைந்த நிலையில் முக்கிய நிகழ்வான கம்பம் பிடுங்கும் விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

பெரிய மாரியம்மன் கோவில், சின்னமாரியம்மன் கோவில், வாய்க்கால் மாரியம்மன் கோவில் என 3 கோவில்களில் இருந்தும் கம்பங்கள் பிடுங்கப்பட்டு மணிக்கூண்டு பகுதியில் இருந்து வீதி ஊர்வலம் நடைபெறும். ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் வீதி, அரசு ஆஸ்பத்திரி சந்திப்பு, மேட்டூர் ரோடு, சுவஸ்திக் கார்னர், எல்லை மாரியம்மன் கோவில் வழியாக காரைவாய்க்கால் வரை நடைபெறும் இந்த கம்பம் ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

அதுமட்டுமின்றி நாளை (சனிக்கிழமை) பெரிய மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழாவும் கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாநகரமே மஞ்சள் பூசிக்கொள்வதுபோல நடைபெறும் இந்த விழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்