மாவட்டத்தில் முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா- ஏராளமான பக்தர்கள் தரிசனம்

மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-05 21:22 GMT

மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பவானி

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பவானி காவேரி வீதியில் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் சின்ன கோவில் என்று அழைக்கப்படும் காசி விஸ்வநாதர் உடனமர் விசாலாட்சி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 28-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பின்னர் காலையும், இரவும் சிறப்பு அபிஷேகத்துடன் ஆராதனை நடைபெற்று வந்தது. நேற்று அதிகாலை திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.

தேரோட்டம்

இதனை தொடர்ந்து உற்சவமூர்த்திகள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதனைத் தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நகரின் முக்கிய வீதி வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை அடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் பவானி நகர தி.மு.க. செயலாளர் ப.சீ.நாகராஜன், நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன், சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள், சிவனடியார்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வருகிற 8-ந் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா முடிவடைகிறது.

பச்சைமலை சுப்பிரமணியசாமி

கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. நேற்று காலை 6 மணி அளவில் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 8 மணி அளவில் திருப்படி பூஜை விழா நடந்தது. காலை 9மணி அளவில் சண்முகருக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடந்தது. அதன்பின்னர் தேருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் முக்கிய நிகழ்ச்சியான ேதரோட்டம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரானது மலையைச் சுற்றிலும் வலம் வந்து நிலை சேர்ந்தது.

இதையொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை கோவில் அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணி அளவில் பரிவேட்டை, குதிரை வாகனத்தில் சாமி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலை 6.30 மணி அளவில் வள்ளி தெய்வானை உடன் சண்முக பெருமான் மலர் பல்லக்கில் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் கோபி பவளமலை முத்துக்குமாரசாமி கோவில், காசிபாளையம் மூன்று முகம் முருகன் கோவில், கோபி கடைவீதி சுப்பிரமணியசாமி கோவில், மூல வாய்க்கால் சுப்ரமணியசாமி கோவில் மற்றும் கோபி பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டுச் சென்றனர்.

கூகலூர்

கோபி அருகே கூகலூரில் அம்பிகை மீனாட்சி சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று முருகருக்கு பால், தயிர், இளநீர், தேன், விபூதி, சந்தனம், குங்குமத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் கூகலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் முருகனை தரிசனம் செய்தனர்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே சிவியார்பாளையத்தில் குன்றின் மீது தவளகிரி தண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை 6 மணி முதல் முருகனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. மேலும் காலை 9.30 மணியில் இருந்து 10.30 மணிக்குள் வள்ளி தெய்வானை- முருகன் திருமணமும் நடத்தி வைக்கப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து பரவசப்பட்டு வணங்கினார்கள்.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை காவிரிக்கரையில் மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவில் உள்ளது. இதன் வளாகத்தில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முகப்சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பஞ்சகாவியம், பச்சரிசி மாவு, தேன், தினை மாவு, கரும்பு சாறு, இளநீர், திருமஞ்சனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து 6 முகங்கள் கொண்ட சண்முகசுப்பிரமணியருக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பஞ்ச தீபம், கும்ப தீபம் காட்டப்பட்டு பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க மகாதீபாராதனை செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே பழனிக்கவுண்டன்பாளையத்தில் குன்றின் மீது உள்ள பழனிக்குமாரசாமி கோவிலில் சாமிக்கு பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, இளநீர் உள்பட 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அர்ச்சனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் பாசூர் காந்த மலை பாலமுருகன் மலைக்கோவிலிலும் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

அந்தியூர் தேர்வீதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இதேபோல் ஆப்பக்கூடல் கணேசபால தண்டாயுதபாணி கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்