காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா; திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

ஈரோடு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-04-04 22:32 GMT


ஈரோடு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

குண்டம் விழா

ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் அதன் வகையறாவான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களின் திருவிழா நடந்து வருகிறது. கடந்த மாதம் 25-ந் தேதி கோவில்களின் முன்பு கம்பம் நடப்பட்டது. தினமும் கம்பத்துக்கு பக்தர்கள் புனிதநீர், பால், மஞ்சள் நீர் ஊற்றியும், மலர், வேப்பிலையை வைத்தும் அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் குண்டம் விழா காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கரும்புகள் (விறகு) குண்டத்தில் அடுக்கி வைக்கப்பட்டு தீ பற்ற வைக்கப்பட்டது. நேற்று அதிகாலையில் பக்தர்கள் தீ மிதிப்பதற்காக குண்டம் தயார் செய்யப்பட்டது. கோவிலின் தலைமை பூசாரி குண்டத்துக்கு சிறப்பு பூஜைகளை செய்து தீ மிதித்தார். அதைத்தொடர்ந்து பூசாரிகளும், வரிசையில் காத்திருந்த பக்தர்களும் குண்டம் இறங்கினர்.

கைக்குழந்தை

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக தீ மிதிக்க அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் பயபக்தியுடன் குண்டம் இறங்கினர். பல பக்தர்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். சிறுவர், சிறுமிகளும் ஆர்வமாக குண்டம் இறங்கினர். குண்டத்தில் பக்தர்கள் தவறி விழுந்து விடாத வகையில் தீயணைப்பு படை வீரர்களும், விழா குழுவினரும் குண்டத்தை சுற்றி நின்று கொண்டனர். குண்டத்தில் தடுமாறிய பக்தர்களை உடனடியாக அவர்கள் பிடித்து மீட்டனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.

குண்டம் இறங்குவதை பார்வையிடுவதற்காக திரளான பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டு இருந்தனர். அனைத்து பக்தர்களும் தீ மிதித்து முடிந்த பிறகு குண்டத்தின் மீது உப்பு, மிளகுகளை பக்தர்கள் வீசினார்கள். விழாவையொட்டி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காரை வாய்க்கால் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவில் மாவிளக்கு பூஜையும், கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

இன்று தேரோட்டம்

இதேபோல் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலிலும் நேற்று காலையில் இருந்து கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றுவதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு பொங்கல் விழா நடைபெறுகிறது. தொடர்ந்து சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடக்கிறது. சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்படும் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க உள்ளனர். பல்வேறு வீதிகளில் பக்தர்களின் தரிசனத்துக்காக தேர் நிறுத்தப்படுகிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலுக்கு தேர் நிலை வந்தடையும். வருகிற 8-ந் தேதி மதியம் 3 மணிக்கு கம்பங்களின் ஊர்வலமும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்