கோபி மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்
கோபி மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கடத்தூர்
கோபி மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகம்
கோபி மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 6-ந் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது. 7-ந்தேதி கணபதி பூஜையும், 8-ந் தேதி பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 9-ந்தேதி முதல் கால யாக பூஜையும், நேற்று முன்தினம் 2-ம் கால யாக பூஜையும், சாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலை 8 மணி அளவில் சிவாச்சாரியார்கள் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் தரிசனம்
தொடர்ந்து காலை 10 மணி அளவில் மகா அபிஷேகமும், கோ தரிசனமும், தச தரிசனமும், மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் தான்தோன்றியம்மன் உற்சவர் திருவீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
கொட்டும் மழையிலும் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவில் கோபி நகர மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம், கோபி 11 வார்டு அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் ஏ.என். முத்துரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கோபி, மொடச்சூர், வேட்டைக்காரன் கோவில், வடுகபாளையம், நாதிபாளையம், நாகர்பாளையம், நாகதேவன் பாளையம், குள்ளம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.