சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில்கள் நடை அடைக்கப்பட்டது

சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில்கள் நடை அடைக்கப்பட்டது.

Update: 2022-11-08 21:07 GMT

சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில்கள் நடை அடைக்கப்பட்டது.

சென்னிமலை

இந்தியாவின் பல பகுதிகளில் நேற்று சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இதனால் சந்திர கிரகண நேரத்தில் தமிழகத்தில் கோவில்கள் அடைக்கப்பட்டன. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் கோவில்கள் நடை அடைக்கப்பட்டது. சென்னிமலை முருகன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து செல்வார்கள். கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து 6 கால பூஜைகள் நடைபெற்ற பிறகு இரவு 8 மணிக்கு மேல் கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம்.

வழக்கம்போல் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்ய வந்தனர். ஆனால் நேற்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. அப்போது கோவிலில் இருந்த பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மாலையில் நடைபெறும் 2 கால பூஜைகள் பகலிலேயே நடைபெற்றது. சந்திர கிரகணம் முடிந்த பிறகு இரவு 7.35 மணி அளவில் மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றது.

சத்தியமங்கலம்

இதேபோல் சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் நேற்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை அடைக்கப்பட்டது. இதனால் கோவில் வெறிச்சோடி கிடந்தது.

பவானி

சந்திர கிரகணத்தை முன்னிட்டு பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் நேற்று மதியம் 3 மணி அளவில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் இரவு 8.30 மணி அளவில் மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.

மேலும் பவானியில் உள்ள செல்லியாண்டி அம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், மேற்கு தெரு மாரியம்மன் கோவில், எல்லை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களிலும் நடை அடைக்கப்பட்டது.

அந்தியூர்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று மதியம் 1 மணி அளவில் நடை அடைக்கப்பட்டது. சந்திர கிரகணம் முடிந்து மாலை 7 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது.

அதேபோல் அந்தியூர் பகுதியில் உள்ள செல்லீஸ்வரர் கோவில், கோட்டை பெருமாள் கோவில், அழகுராஜா பெருமாள் கோவில், பேட்டை பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நடை அடைக்கப்பட்டது.

கோபி

கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், அமர பணீஸ்வரர் கோவில், ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி வரதராஜ பெருமாள் கோவில், கோபி சாரதா மாரியம்மன் கோவில், கோபி பவளமலை முத்துக்குமார சாமி கோவில், பச்சைமலை சுப்ரமணிய சாமி கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவில்களில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் நடை அடைக்கப்பட்டது. கிரகணம் முடிந்த பிறகு இரவு 7 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது.

கொடுமுடி

கொடுமுடியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று காலை 9.45 மணி அளவில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணி அளவில் மகுடேஸ்வரர், வடிவுடை நாயகி, பிரம்மா, ஆஞ்சநேயர், மகாலட்சுமி, வீரநாராயண பெருமாள், சனீஸ்வரர், காலபைரவர், நவக்கிரகங்கள் ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 7 மணி அளவில் நடை திறக்கப்பட்டது.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் நாகேஸ்வரர், கொளாநல்லி பாம்பலங்காரர், பெருமாள், கொந்தளம் நாகேஸ்வரர், பழனிக் கவுண்டம்பாளையம் பழனியாண்டவர் மலைக்கோவில்கள் மற்றும் இச்சிப்பாளையம் கிராமத்தில் கோனப் பெருமாள் கோவில், கிழக்காலூரில் உள்ள பெருமாள் கோவில், வடக்கு புதுப்பாளையம் லட்சுமி நரசிம்மர் ஆலயம், கொந்தளம் வரதராஜ பெருமாள், பனப்பாளையம் ஸ்ரீராமர் சன்னிதி, வடக்கு காளிபாளையம் சீதாராமர் கோவிலில் காலை 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது. பின்னர் மாலை 6.40 மணிக்கு நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்றன.  

Tags:    

மேலும் செய்திகள்