ஈரோடு சஞ்சய் நகர் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

ஈரோடு சஞ்சய் நகர் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-08-21 21:39 GMT

ஈரோடு

ஈரோடு சஞ்சய் நகர் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சக்தி விநாயகர்

ஈரோடு அருகே சஞ்சய் நகரில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 11-ந்தேதி யாக சாலையில் முளைப்பாலிகை போடுதல் நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 19-ந்தேதி காலை 7 மணிக்கு மகா கணபதி வழிபாடு, மகா லட்சுமி ஹோமம் நடந்தது. பின்னர் 9 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். அன்று மாலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

20-ந்தேதி காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், பகல் 10.30 மணிக்கு விமான கோபுர கலசம் வைத்தல் மற்றும் மூலஸ்தான சக்தி விநாயகர், பரிவார தெய்வங்களுக்கு யந்த்ர ஸ்தாபனம் செய்து அஷ்டபந்தனம் மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் அன்று மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும், நேற்று காலை 7 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும் நடந்தது.

இதைத்தொடர்ந்து பகல் 11.45 மணிக்கு விமான கோபுரம் மற்றும் மூலவர் சக்தி விநாயகர் பரிவார தெய்வங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையொட்டி சக்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்