சிவன் கோவிலில் உழவாரப்பணியுடன் பிரதோஷ பூஜை
சிவகங்கை அருகே மிகப் பழமையான சேதமடைந்த சிவன் கோவிலில் உழவாரப்பணியுடன் பிரதோஷ பூஜை நடைபெற்றது.
சிவகங்கை,
சிவகங்கை அருகே மிகப் பழமையான சேதமடைந்த சிவன் கோவிலில் உழவாரப்பணியுடன் பிரதோஷ பூஜை நடைபெற்றது.
சிவன்கோவில்
சிவகங்கையை அடுத்த முடிக்கரை கள்ளத்தி கிராமத்தில் மிகப் பழமையான சிவன் கோவில் உள்ளது. இதன் அருகிலேயே பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இந்த 2 கோவில்களும் 10-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கோவில்களில் தரைமட்டத்தில் இருந்து 7 அடி உயரம் வரை வெள்ளைக்கல் கொண்டும் அதற்குமேல் செம்பாறாங்கல் கொண்டும் கட்டப்பட்டு உள்ளது.
மிகப்பழமையான இந்த 2 கோவில்களும் உரிய பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து விட்டது. இதில் பெருமாள் கோவிலில் இருந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் மற்றும் கருடாழ்வார் ஆகிய சிலைகளை கோவிலில் இருந்து வெளியே எடுத்து பக்கத்தில் ஒரு சிறிய கட்டிடத்தை கட்டி அதற்குள் வைத்து உள்ளனர்.
உழவாரப்பணி
மேலும் சிவன் கோவிலில் வாரத்திற்கு 2 முறை பூஜை நடைபெற்று வந்துள்ளது. சிவன் கோவில் பல பகுதிகள் இடிந்து விட்டன. அத்துடன் கோவிலின் மேல் மரங்கள் வளர்ந்திருந்தன. அதைத் தொடர்ந்து சேலம் சதுர்கால பைரவர் உழவாரப்பணி சிவனடியார்கள் திருக்கூட்டம், மற்றும் இளையான்குடி மாறநாயனார் அடியார்கள் திருக்கூட்டம் மற்றும் சிவகங்கை, காளையார்கோவில், சிவனடியார்கள் திருக்கூட்டம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த சிவனடியார்கள இந்த கோவிலில் உழவாரப் பணி மேற்கொண்டு தூய்மை செய்தனர்.
மேலும் கோவிலின் கருங்கல் சுவரில் இருந்த அழுக்கு மற்றும் தூசிகளை தூய்மைப்படுத்தினர். மேலும் கோவிலை சுற்றி வளர்ந்திருந்த முள் செடிகள் அகற்றப்பட்டன.
சிறப்பு அபிஷேகம்
அத்துடன் கோவிலில் இருந்த தரைமட்ட கிணற்றை 2 அடி உயர்த்தியுள்ளனர். தொடர்ந்து நேற்று பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் இருந்த சிவபெருமான் நந்தி மற்றும் சொர்ணவல்லி தாயார், காளியம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற இந்த பிரதோஷ வழிபாட்டில் முடிக்கரை கிராமத்தை் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.