சிறுமியை பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு 20 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமியை பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே எஸ்.புதூரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் அழகுவேல் (வயது 35). கொத்தனார். இவர் சிறுபாக்கம் ஆண்டவர் கோவிலில் கடந்த 1.6.2020 அன்று மதியம் நடந்த அன்னதானத்திற்கு சென்றிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி, அன்னதானம் வாங்குவதற்காக வந்தாள். ஆனால் அதற்குள் அன்னதானம் முடிந்து விட்டது.
இதை பார்த்த அழகுவேல், அந்த சிறுமியிடம் அன்னதானம் வாங்கி தருவதாக கூறி, அங்குள்ள முட்புதருக்குள் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது பற்றி சிறுமியின் தந்தை சிறுபாக்கம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அழகுவேலை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.
அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் அழகுவேல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இது தவிர பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, எதிர்கால நலன் கருதி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர், அரசின் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தர விட்டார்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாச்செல்வி ஆஜரானார்.