கோரம்பள்ளம் குளத்தின் பாசன கால்வாய் அடைப்புகள் அகற்றம்
கோரம்பள்ளம் குளத்தின் பாசன கால்வாய் அடைப்புகளை புதன்கிழமை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
ஸ்பிக்நகர்:
கோரம்பள்ளம் குளத்தின் பாசன பகுதிகளிலிருந்து வெளியேறும் உபரிநீர் அத்திமரப்பட்டி, ஜெ.எஸ் நகர், பாரதிநகர், தங்கமணிநகர், முள்ளக்காடு வழியாக கடலுக்கு செல்கிறது. இந்த கால்வாய்களில் குப்பைகள், பொதுமக்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி வீசும் காலி குளிர்பான பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் தண்ணீர் செல்லமுடியாமல் அடைப்பு ஏற்பட்டது. இதனால் இந்த பகுதிகளில் தாழ்வான பகுதிகள் மழைதண்ணீர் பாய்ந்து தேங்கியது. உடனடியாக இந்த கால்வாயில் அடைப்புகளை நீக்கி, சீரமைத்து மழைத்தண்ணீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்துக்கு விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து நேற்று மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையர் ராமச்சந்திரன் ஆலோசனையின்படி மாநகராட்சி ஊழியர்கள் கோரம்பள்ளம் பாசன கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாமல் அடைத்திருந்த குப்பைகள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். இதனால் கோரம்பள்ளம் குளத்தின் பாசன பகுதியிலிருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய் வழியாக எளிதாக செல்கிறது. கோரிக்கைகளை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.