ரூ.12 கோடி செலவில் கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணி; கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

கோரம்பள்ளம் குளத்தை ரூ.12 கோடி செலவில் சீரமைக்கும் பணிகளை கனிமொழி எம்.பி. நேற்று தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-07 18:45 GMT

கோரம்பள்ளம் குளத்தை ரூ.12 கோடி செலவில் சீரமைக்கும் பணிகளை கனிமொழி எம்.பி. நேற்று தொடங்கி வைத்தார்

தூர்வாரும் பணி

தூத்துக்குடி கோரம்பள்ளம் உப்பாற்று ஓடை உபரிநீர் வழிந்தோடி ரெகுலேட்டர் அருகே ரூ.12 கோடி மதிப்பீட்டில் தூர்வாருதல் பணிகள் மற்றும் சூழலியல் பூங்காவுக்கு மண் வழங்கும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கோரம்பள்ளம் குளத்தை தூர்வார வேண்டும் என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ரூ.12 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த குளம் தூர்வாரப்படாததால் 228 மில்லியன் கனஅடியாக இருந்த கொள்ளளவு 213 மில்லியன் கனஅடியாக குறைந்துள்ளது. குளத்தின் மூலம் 2 ஆயிரத்து 268 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று 3 ஆயிரத்து 525 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். குளத்தை தூர்வாருவதன் மூலம் கொள்ளளவு அதிகரிக்கப்படும்.

சூழலியல் பூங்கா

தூத்துக்குடி வாழ்மக்களின் அமைதியான, மகிழ்ச்சியான, சுகாதாரநலம், சமூகநல்லிணக்கம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கைகளில் முக்கியமானதாக உயர்த்தப்பட்ட தளஅமைப்பில் ஒரு சூழலியல் பூங்கா அமைப்பதும் ஒன்றாகும். அந்தப் பணிக்காக தாமிரபரணி ஆற்றுப்பாசன அமைப்பில் இடம் பெற்றுள்ள வடகால் பாசனத்தில் உள்ள கோரம்பள்ளம் குளத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு சென்று பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியை செய்வதன் மூலம் புதிதாக அமைக்கப்படவுள்ள சூழலியல் பூங்காவில் தரைமட்டம் உயர்த்தப்படுவதோடு, கோரம்பள்ளம் குளத்தின் கொள்ளளவு சுமார் 15.09 மில்லியன் கனஅடி அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்தப் பணிக்காக கோரம்பள்ளம் குளத்தில் படர்ந்துள்ள மண் திட்டுகள் மற்றும் தரைமட்டத்துக்கு மேல் படிந்து உள்ள மண் ஆகியவை சுமார் 4 லட்சத்து 27 ஆயிரத்து 300 கனமீட்டர் வரை எடுக்கப்பட உள்ளன. மேலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன் கடல்நீர் உட்புகுவதும் குறைக்கப்படும். அத்திமரப்பட்டி, காலாங்கரை, முள்ளக்காடு, முத்தையாபுரம், கோரம்பள்ளம் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 3 ஆயிரத்து 525 விவசாய பெருமக்களின் வாழ்வாதாரம் உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ஜெகன், தாமிரபரணி வடிநில செயற்பொறியாளர் எஸ்.மாரியப்பன், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி வடிநில கோட்டம் உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம், ஏரல் வடகால் பிரிவு உதவிசெயற்பொறியாளர் பாஸ்டிங்வினு, வடகால் பிரிவு பண்டாரம், முக்கிய பிரமுகர்கள் உமரிசங்கர், ராமஜெயம், முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாய சங்க தலைவர் பூபதி, செயலாளர் ரகுபதி, பொருளாளர் கந்தசாமி, ஜோதிமணி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்