மாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா

ஆரணியில் மாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது.

Update: 2023-08-06 14:30 GMT

ஆரணி

ஆரணி பள்ளிக்கூட தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக ஆரணி கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் இருந்து பூங்கரகம் ஜோடித்து தாரை, தப்பட்டை, பம்பை உடுக்கைகளுடன்  ஊர்வலமாக சென்றனர்

அப்போது 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வாயில்  நீளமான வேல் அலகு குத்திக்கொண்டு உடலில் எலுமிச்சம்பழம் குத்திக்கொண்டு வந்தனர்.

மேலும் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உடலில் எலுமிச்சம் பழம் குத்திக்கொண்டு காலில் கொக்காலி கட்டை கட்டிக்கொண்டும், 508 பெண்கள் தீச்சட்டி ஏந்தியும்,  சிறுவர்கள், சிறுமிகள் வேப்பிலை ஆடை அணிந்து ஊர்வலமாக  சென்றனர்.

ஊர்வலத்துடன் சிவன், பார்வதி, விநாயகர் உள்ளிட்ட தெய்வ உருவங்களுடன் சென்றனர். கோவில் வெளி வளாகத்தில் பெரிய இரும்பு கொப்பரையில் பக்தர்கள் கொண்டு வந்த கூழை ஊற்றினர்.

பின்னர் அக்கூழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் கோவில் முன்பு பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

இரவு உற்சவரை மலரால் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வாணவேடிக்கைகளுடன் நடந்தது.

நாளை (திங்கட்கிழமை) இரவு நாடகம் நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவரும், மாவட்ட கவுன்சிலருமான அ.கோவிந்தராசன், ஆரணி நகர மன்ற முன்னாள் துணைத்தலைவர் தேவசேனா ஆனந்த், நகரமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.மோகன், தேவராஜ் மற்றும் விழா குழுவினர், இளைஞர்கள், பொதுமக்கள்  செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்