கல்வராயன்மலையில் தொடர்மழை எதிரொலி:கோமுகி அணை நீர்மட்டம் 32 அடியாக உயர்வு
கல்வராயன்மலையில் தொடர்மழை காரணமாக கோமுகி அணை நீர்மட்டம் 32 அடியாக உயர்ந்துள்ளது.
கச்சிராயப்பாளையம்,
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் தொடர்ச்சியாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் கல்வராயன்மலை பகுதியில் மழை பெய்து வருகிறது.
இந்த மழையானது கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் நீடித்தது. இதனால், கல்படை ஆற்றின் வழியாக கோமுகி அணைக்கு விநாடிக்கு 200 கனஅடி வீதம் நீர் வரத்து இருந்தது. இதன் மூலம் 46 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டமும் மெல்ல உயர்ந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நீர் வரத்தானது, விநாடிக்கு 150 ஆக குறைந்தது.
இருப்பினும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 25 அடியாக இருந்தது. தற்போது பெய்த மழையால் தொடர்ச்சியாக நீர் வரத்து இருந்து வருவதால் நீர்மட்டமானது 32 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையை சார்ந்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.