சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் கொள்ளிடம் பழைய ரெயில் நிலைய கட்டிடம்
செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் கொள்ளிடம் பழைய ரெயில் நிலைய கட்டிடத்தை இடித்து விட்டு பூங்கா கட்டப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கொள்ளிடம்:
செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் கொள்ளிடம் பழைய ரெயில் நிலைய கட்டிடத்தை இடித்து விட்டு பூங்கா கட்டப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் நிலையம் கட்டப்பட்டது. இந்த ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் இடம், பயணிகள் அமருமிடம், நிலைய அலுவலர் அறை, கழிப்பிட வசதி, அலுவலக அறை உள்ளிட்டவைகள் உள்ளன. இந்த ரெயில் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த ரெயில் நிலையம் வழியாக சென்னைக்கு மீட்டர்கேஜ் பாதையில் ரெயில்கள் சென்று வந்தன.
அந்த காலத்தில் சென்னைக்கு செல்ல இந்த வழித்தடம் மெயின் லைனாக இருந்தது. காலப்போக்கில் இந்த ரெயில் நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்து காணப்பட்டது. இந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் அல்லது புதிதாக கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ரெயில் நிலைய கட்டிடம் புதர் மண்டி கிடக்கிறது
இதை தொடர்ந்து விழுப்புரம் முதல் மயிலாடுதுறை வரை அகல ரெயில் பாதை அமைக்கப்பட்ட போது கொள்ளிட்டத்தில் உள்ள பழைய ரெயில் நிலையம் அருகே புதிதாக ரெயில் நிலையம் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் பழைய ரெயில் நிலைய கட்டிடம் பராமரிப்பின்றி மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
பழைய ரெயில் நிலைய கட்டிடத்தில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் மது அருந்தி வருகின்றனர். சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் இந்த கட்டிடத்தில் மதுபாட்டில்கள் மற்றும் தண்ணீர் கப்புகள் சிதறி கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் செல்ல அஞ்சி வருகின்றனர்.
இடித்து விட்டு பூங்கா கட்ட வேண்டும்
இந்த ரெயில் நிலையத்தில் ஆலமரம் வளர்ந்து விழுதுகள் சுவரில் சென்றதால் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அருகே பொதுமக்கள் தினமும் சென்று வருகின்றனர். எனவே அசம்பாவித சம்பவங்கள் எதும் ஏற்படுவதற்கு முன்பு பராமரிப்பின்றி காணப்படும் பழைய ரெயில் நிலைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு அங்கு மக்களுக்கு பயன்படும் வகையில் பூங்கா அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
துர்நாற்றம்
கொள்ளிடத்தை சேர்ந்த ஜலபதி கூறுகையில், கொள்ளிடத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய ரெயில் நிலையம் பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கிறது. புதிதாக ரெயில் நிலையம் கட்டப்பட்டு செயல்பட்டு வருவதால், இந்த பழைய கட்டிடத்தில் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் இங்கு மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. குறிப்பாக இங்கு ஆலமரம் வளர்ந்து சுவரில் வேர்கள் மற்றும் விழுதுகள் சென்று விரிசல் விட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்த கட்டிடத்தில் சமூக விரோதிகள் மது அருந்தி விட்டு மதுபாட்டில்கள், உணவு பொருட்களை வீசி செல்வதால் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சிலர் இந்த கட்டிடத்தை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள பழைய ரெயில் நிலைய கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு அங்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நூலக கட்டிடம் மற்றும் சிறுவர் பூங்கா அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.