கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது.

Update: 2022-08-30 15:38 GMT

கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி மேட்டூர் அணைக்கு உபரி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு மேலணையை அடைந்து அங்கிருந்து கல்லணையை வந்தடைகிறது. கல்லணையில் இருந்து கொள்ளிடம், காவிரி ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வரத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடல்போல காட்சி அளிக்கிறது.

தண்ணீர் சூழ்ந்தது

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கரையோர கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களில் உள்ள சாலைகள், குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. இந்த பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் சிலர் தங்கள் வீடுகளிலேயே தங்கி உள்ளனர். குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். வெள்ளம் அதிகம் சூழ்ந்த பகுதியில் தவிப்பவர்கள் படகு மூலமும் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்தநிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, ஊராட்சி தலைவர் கனகராஜ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு முகாம் அமைப்பதற்கும், அவர்களுக்கு உணவுகள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்