கடல்நீர் உட்புகுவதால் சுத்தமான குடிநீருக்கு ஏங்கும் கொள்ளிடம் படுகை கிராமங்கள்

ஆறு நிறைய தண்ணீர் இருந்தும் அது உப்புநீராக இருப்பதால் குடிக்க வழியில்லாமல் கொள்ளிடம் படுகை கிராமங்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கடல்நீர் உட்புகுவதை தடுக்க அளக்குடி- திருக்கழிப்பாலை இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும் என மக்கள் அரசுக்கு ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-13 18:45 GMT

கொள்ளிடம்:

ஆறு நிறைய தண்ணீர் இருந்தும் அது உப்புநீராக இருப்பதால் குடிக்க வழியில்லாமல் கொள்ளிடம் படுகை கிராமங்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கடல்நீர் உட்புகுவதை தடுக்க அளக்குடி- திருக்கழிப்பாலை இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும் என மக்கள் அரசுக்கு ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம் ஆறு

கர்நாடகத்தின் குடகு மலையில் உற்பத்தியாகி தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி கரையோர மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் ஆறுகளில் கொள்ளிடம் ஆறும் ஒன்று. மயிலாடுதுறை-கடலூர் மாவட்ட எல்லை அருகே பழையாறு என்ற இடத்தில் வங்கக்கடலுடன் கொள்ளிடம் ஆறு சங்கமிக்கிறது.

திருச்சி முக்கொம்பில் இருந்து பல்வேறு கிளை ஆறுகளாக பிரிந்து கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரையை எட்டும் கொள்ளிடம் ஆறு அங்கிருந்து தெற்கு ராஜன் வாய்க்கால், வடக்கு ராஜன் வாய்க்கால் என 2 கிளை வாய்க்காலாக பரிந்து கடைமடை பகுதி வரை விவசாயிகளுக்கு தண்ணீரை கொண்டு சேர்க்கிறது.

படுகை கிராமங்கள்

பாசனத்துக்கு உதவுவதுடன், மழைக்காலங்களில் வெள்ளம் வடிந்து செல்வதற்கும் உதவி வரும் கொள்ளிடம் ஆற்றின் படுகை பகுதியில் ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன. கொள்ளிடம் கரையோரத்தில் உள்ள அடர்ந்த காடுகள், விலை உயர்ந்த மரங்கள், அரிய வகை பறவைகள், விலங்குகள் என இயற்கை சரணாலயமாக திகழ்கிறது.

சீர்காழி அருகே பழையாறு பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உட்புகுந்து உப்பு நீர் கலப்பதால் 50-க்கும் மேற்பட்ட படுகை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகாலமாக சுத்தமான குடிநீருக்காக தொடர்ந்து அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு எப்போது நிவாரணம் கிடைக்கும்? என கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராம மக்கள் எதிர்பார்த்து தவிப்புடன் காத்திருக்கிறார்கள்.

தடுப்பணை

கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் பகுதியான பழையாறு கிராமத்துக்கு 5 கிலோமீட்டர் தொலைவுக்கு முன்பு அளக்குடி- திருக்கழிப்பாலை இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டினால், கடல் நீர் உட்புகுவதையும், குடிநீர் உப்புநீராக மாறுவதையும் தடுக்க வழி உள்ளது. இதை விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள்.

கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு பகுதியில் வங்கக்கடல் நீர் ஆற்றுக்குள் 25 கிலோ மீட்டர் தூரம் வரை உட்புகுந்து வருகிறது. இந்த பகுதியில் ஆற்று நீருடன், நிலத்தடி நீரும் உப்புத்தன்மையுடன் இருப்பதால் நீரை குடிக்கவும் பயன்படுத்த முடியாமல், விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியாமல் படுகை கிராம மக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இதுகுறித்து கொள்ளிடத்தை சேர்ந்த அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட செயலாளர் வேட்டத்தங்கரை விஸ்வநாதன் கூறியதாவது:-

காய்கறி-மலர் சாகுபடி

கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள படுகை கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நெல், வாழை, காய்கறி, மலர் சாகுபடி நடந்து வருகிறது. வங்கக்கடல் நீர் உட்புகுவதால், குடிநீர் ஆதாரம் இல்லாமல் கிராம மக்கள் தவித்து வருகிறார்கள்.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பல மாவட்டங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட நீர் ஆதாரமாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் உப்பு நீர் கலந்து, அதன் கரையோர கிராமங்கள் அல்லல்பட வேண்டி உள்ளது. கதவணை கட்ட ரூ.702 கோடியே 40 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இங்கு காலம் தாழ்த்தாமல் கதவணை கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க் வேண்டும்.

தண்ணீரை தேக்கி வைக்க...

கொள்ளிடம் அருகே உள்ள நாதல் படுகை கிராமத்தை சேர்ந்த தோட்டக்கலை விவசாயி ரவிசுந்தரம்:- கடலூர், மயிலாடுதுறை ஆகிய 2 மாவட்டங்களுக்கும் கொள்ளிடம் ஆறு முக்கிய பாசன ஆறாகவும், வடிகாலாகவும் திகழ்கிறது. கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படும்போது ஆற்றுநீர் தித்திக்கும். வெள்ளம் வடிந்த பிறகு ஆற்று நீரின் சுவை உப்பாக மாறி விடும். ஆறு நிறைய தண்ணீர் இருந்தும் அது உப்புநீராக இருப்பதால் அதை பயன்படுத்த முடியவில்லை. இதனால் ஆற்றுப் படுகை கிராமங்களில் காய்கறி, மா, பலா, வாழை போன்றவற்றை பயிரிட முடியவில்லை. கடைமடை விவசாயிகள் நலன் கருதி வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை தேக்கி வைக்கவும், கடல் நீர் உட்புகுவதை தடுக்கவும் அளக்குடி- திருக்கழிப்பாலை இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்