2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலம்: திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
திருப்பரங்குன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத்திருவிழா கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத்திருவிழா கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
தெப்பத்திருவிழா
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 22-ந்தேதி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.
சிகர நிகழ்ச்சியாக நேற்று தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.ரோட்டின் வடக்கு பகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் சுமார் 6½ அடி உயரத்துக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு தயார்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 24 அடி நீளமும், 24 அடி அகலமும், 28 அடி உயரமும் கொண்ட தெப்பம் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தது.
தங்கம், பவளம், வைடூரியம் போன்ற நகை அணிகலன்களாலும், புத்தம் புதிய வஸ்திரத்தாலும், வாசனை கமழும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு முருகப்பெருமான், அம்பாளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க நகர் வீதிகளில் வலம் வந்து தெப்பக்குளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர்.
3 முறை தெப்ப மிதவை தேர்வலம்
காலை 10.57 மணிக்கு மண்டபத்தில் இருந்து அம்பாளுடன் சுவாமி புறப்பட்டு, தெப்பத்தில் எழுந்தருளினார்.
இதனை தொடர்ந்து அங்கு குவிந்து இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி பரவசத்துடன் தெப்பத்துடன் இணைக்கப்பட்ட வடத்தினை பிடித்து இழுத்ததை ெதாடர்ந்து, தெப்ப உற்சவம் தொடங்கியது.
தெப்பம் மெல்ல, மெல்ல 3 முறை குளத்தை வலம் வந்தது.
இதே போல இரவில் மின்னொளியில் வாணவேடிக்கைகள் முழங்க தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார்.
இரவிலும் தெப்பத்தில் வீற்றிருந்து தெப்பக்குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பத் திருவிழா நடந்ததால் ஏராளமாக பக்தர்கள் குவிந்து, சாமி தரிசனம் செய்தனர். .
சூரசம்ஹார லீலை
நேற்று தெப்பத் திருவிழா முடிந்ததும் தங்கக்குதிரை வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்ஹார லீலை நடைபெற்றது. இந்த கோவிலை பொறுத்தவரை ஒரு ஆண்டுக்கு 3 முறை சூரசம்ஹார லீலை நடைபெற்று வருகிறது.
ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி திருவிழாவின்போது பிரமாண்டமாக சூரசம்ஹாரம் நடக்கிறது. தெப்பத்திருவிழா, பங்குனி பெருவிழாவிலும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.