கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தை மேம்படுத்த வேண்டும்
சாலை, பேட்டரி வாகன வசதிகளை செய்து கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
சாலை, பேட்டரி வாகன வசதிகளை செய்து கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனவிலங்கு சரணாலம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பகுதியில் வங்காள விரிகுடாவும், பாக்ஜலசந்தியும் இணையும் பகுதியை ஒட்டி 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.
இந்த பசுமை மாறாக்காட்டில் புள்ளிமான், வெளிமான், குரங்கு, நரி, பன்றி, குதிரை, மயில் உள்ளிட்ட விலங்குகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. இந்த காட்டின் தென்புறத்தில் பாக்ஜலசந்தி கடற்கரை பகுதியில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் வரலாற்று நினைவுச் சின்னமாக உள்ளது.
கலங்கரை விளக்கம்
இந்த காட்டில் 154 மூலிகை உள்ளிட்ட 271 வகையான தாவர வகைகள் உள்ளன. 52 குளங்களும், 18 நீர் தேக்கத்தொட்டிகளும் உள்ளன. ராமாயணத்தில் இலங்கையில் போரிட ராமன் சென்றபோது இங்கு நின்று இலங்கையை பார்த்த இடம் ராமர் பாத நினைவிடமாக தொல்பொருள் ஆராய்ச்சித்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கடற்கரையில் பராந்தக சோழனால் அமைக்கப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழா்கால கலங்கரை விளக்கமும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1931-ம் ஆண்டு அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கமும் தற்போது ஆசியாவிலேயே 2-வது பெரிதாக விளங்கும் 157 அடி உயரத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கமும் அமைந்துள்ளது.
274 பறவை இனங்கள்
வரலாற்று புகழ்பெற்ற கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் வரும் குழகர் கோவில் (முருகன் கோவில்) இங்கு உள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றித்திரியும் வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். இந்த சரணாலயத்தில் பழுபாகற்காய், பாலாபழம் மனிதர்களுக்கு பறவைகளுக்கு உணவாக அமைகிறது.
வனவிலங்கு சரணாலயத்திற்கு எதிர்புறம் பறவைகள் சரணலாயம் சதுப்பு நிலப் பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ஈரான், ஈராக், ரஷியா, பாகிஸ்தான், சைபீரியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து 274 பறவை இனங்கள் வந்து செல்கின்றன.
டால்பின் மீன்கள்
இந்த பறவைகள் பம்ப்ஹவுஸ், முனியப்பன் ஏரி, ராமர் பாதம், முனங்காடு, சவுக்கு பிளாட் ஆகிய பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக அளவில் காணலாம். பறவைகளுக்கு பாதுகாப்பாக விளங்கும் இந்த சரணாலயம் 2002-ம் ஆண்டு 17-வது ராம்சார்சைட் என்ற அந்தஸ்தை பெற்றது. கோடியக்கரை பாக்ஜலசந்தி கடலில் அக்டோபர் முதல் மார்ச் வரை டால்பின் மீன்களும் வந்து செல்கின்றன. கோடியக்கரையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம், புரதான கால நினைவுச்சின்னங்கள் உள்ளிட்டவைகளை சுற்றுப்பார்ப்பதற்கு காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் உகந்த நேரம் என வனத்துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் விளக்க கூடம்
வனவிலங்கை சுற்றிப்பார்க்க சூழல் மேம்பாட்டுக்குழு சார்பில் வாகன வசதியும், சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு மூன்று ஓய்வு விடுதியும் பறவைகளை பார்ப்பதற்கு பைனாகுலர் மற்றும் வழிகாட்டிகள் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கோடியக்கரையின் சிறப்பு அனைத்தையும் சுற்றுலா பயணிகள் விவரமாக அறிந்துகொள்ள வனச்சரக சரணாலய நுழைவு வாயிலில் தகவல் விளக்க கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருவதை அதிகரிக்க கடற்கரையில் பூங்கா மற்றும் உயர்கோபுர மின்விளக்கு, தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் உணவு விடுதி, சுற்றுலா பயணிகள் கடலில் படகு சவாரி செய்வதற்கு படகுத்துறையும் அமைக்க வேண்டும்.
மேம்படுத்த வேண்டும்
வனவிலங்கு சரணாலயத்தில் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது அதையும் சீர்செய்து மேம்படுத்த வேண்டும், கோடியக்கரை வனவிலங்குகளை சுற்றி பார்ப்பதற்கு பேட்டரி வாகன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.