கால்வாயில் பிணமாக கிடந்த பெண் வழக்கில் திடீர் திருப்பம்: மூதாட்டியை கொன்று 28 பவுன் நகை கொள்ளை- கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது

கால்வாயில் பிணமாக கிடந்த பெண் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. நகைக்காக மூதாட்டியை கொன்று அவரது உடலை கால்வாயில் வீசி சென்ற கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-28 21:41 GMT

நாகமலைபுதுக்கோட்டை

கால்வாயில் பிணமாக கிடந்த பெண் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. நகைக்காக மூதாட்டியை கொன்று அவரது உடலை கால்வாயில் வீசி சென்ற கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மூதாட்டி படுகொலை

நாகமலைபுதுக்கோட்டை அருகே நிலையூர் கால்வாயில் கடந்த 12-ந்தேதி சுமார் 60 வயது் மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நாகமலைபுதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்ற விவரங்கள் தெரியவில்லை.

இது தொடர்பாக நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

இறந்தவர் மதுரை செல்லூர் கீழத்தோப்பைச் சேர்ந்த ராஜாமணி என்பதும், அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததும், மேலும் திருநகரைச் சேர்ந்த வசந்தி என்பவருக்கு ரூ.1 லட்சம் வட்டிக்கு கொடுத்திருந்ததும், வசந்தியிடம் பணம் வாங்கி வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற அவர் அதன்பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.

28 பவுன் நகை கொள்ளை

இதையடுத்து வசந்தியை பிடித்து போலீசார் விசாரித்த போது, ராஜாமணியிடம் இருந்து ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்ததாகவும், பணத்தைக் கேட்டு ராஜாமணி தொந்தரவு செய்து வந்ததாகவும் தெரிகிறது. வசந்திக்கு மேலும் ரூ.5 லட்சம் கடன் இருந்ததாகவும், கடனை அடைக்க வழி தெரியாமல் இருந்த போது, எப்பொழுதும் தங்க நகைகளுடன் வலம் வரும் ராஜாமணியை கொலை செய்து அவர் அணிந்துள்ள நகைகளை அபகரித்து தங்களது கடனை அடைக்க வசந்தி திட்டமிட்டு இருந்தார். அதன்படி கடந்த 11-ந்தேதி கடனை திரும்பக்கேட்டு வீட்டிற்கு வந்த ராஜாமணியை வசந்தியும், அவரது கணவர் சத்தியமூர்த்தியும் சேர்ந்து தலையணையால் அவரது முகத்தை அமுக்கி கொலை செய்தனர். அதன்பிறகு அவர் அணிந்திருந்த 28 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர், ஆட்டோ டிரைவர் வீர பெருமாள் உதவியுடன் ராஜாமணியின் உடலை ஆட்டோவில் ஏற்றி சென்று நாகமலைபுதுக்கோட்டை அருகே நிலையூர் கால்வாயில் வீசிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து வசந்தி, சத்தியமூர்த்தி, வீர பெருமாள் ஆகியோரை கைது செய்த போலீசார் ஆட்டோ மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர். முன்பு வசந்தி தனது குடும்பத்துடன் செல்லூர் கீழத்தோப்பில் ராஜாமணி வீடு அருகே குடியிருந்து வந்ததாகவும் அப்போது அவர்கள் இருவரும் தாய், மகள் போன்று மிகவும் பாசமாக பழகி வந்ததாகவும், அந்த நட்பின் அடிப்படையிலேயே வசந்திக்கு ராஜாமணி கடன் கொடுத்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்